டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் அபிஷேக் பச்சன்.. காரணம் இதுதான்..!!
நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், தனது பெயர் மற்றும் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். AI மூலம் மார்பிங் செய்யப்பட்ட அவரது புகைப்படங்கள் பரவுவதாகவும், டி-சர்ட்கள், பாத்திரங்கள் போன்றவற்றில் அவரது உருவம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கு தனிநபர் உரிமைகள் மற்றும் பிரபலங்களின் பிம்பத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் தரப்பு வாதத்தில், அவரது அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்காக அவரது பெயர் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவது, தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது பிரபலத்தை தவறாக பயன்படுத்தி லாபம் ஈட்ட முயலும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: என் போட்டோ, பெயர் எதையும் பயன்படுத்தக்கூடாது.. டெல்லி ஐகோர்ட்டுக்கு போன 'உலக அழகி'..!!
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் இவ்வழக்கு ஜனவரி 18, 2026 இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே இது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயின் கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், தனது புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரல் ஆகியவை வணிக மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உத்தரவு கோருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர், அவரது தந்தை அமிதாப் பச்சனும் இதேபோன்ற பிரச்சினைக்காக 2022இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், அங்கு அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அபிஷேக் பச்சன் தனது மனுவில், ஆன்லைன் தளங்களில் அவரது புகைப்படங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் மோசடி விளம்பரங்கள் மற்றும் லாட்டரி மோசடிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதுடன், பொதுமக்களையும் ஏமாற்றுவதாக அவர் வாதிட்டார். இதனைத் தடுக்க, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, முதற்கட்டமாக ஆன்லைன் தளங்களில் அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அகற்ற உத்தரவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அவர்களின் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இது இந்தியாவில் பிரபலங்களின் உரிமைகள் தொடர்பான சட்ட விவாதங்களுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் முடிவு, எதிர்காலத்தில் இதேபோன்ற சம்பவங்களுக்கு முன்னுதாரணமாக அமையலாம்.
இதையும் படிங்க: என் போட்டோ, பெயர் எதையும் பயன்படுத்தக்கூடாது.. டெல்லி ஐகோர்ட்டுக்கு போன 'உலக அழகி'..!!