×
 

அன்னையின் இறுதி சடங்கு! கண்ணீருடன் அஜித் குமார்! பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணியின் இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என்று அஜித் சகோதரர்கள் கூட்டாக அறிவித்திருந்தனர். அதன்படியே இறுதி சடங்கு நடந்து முடிந்தது.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (89) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிந்தி சமூகத்தைச் சேர்ந்த மோகினி மணி, மகன் அஜித்துடன் சென்னையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அஜித் அப்போது துபாயில் இருந்தார். தாயின் மறைவு செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சென்னை புறப்பட்டு, நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

மோகினி மணியின் உடல் அஞ்சலிக்காக சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் வைக்கப்பட்டது. தமிழக அமைச்சர் ராஜ் மோகன், நடிகர்கள் சரத்குமார், நாசர், இயக்குநர்கள் ஷங்கர், ஏ.எல். விஜய், சிவா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் விஜய் நேற்றிரவு அஜித் இல்லத்துக்கு நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அஜித்தை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க: யூடியூப் லைவில் AK..!! மீண்டும் களம் காணும் அஜித்குமார் ரேசிங் அணி.. பிரான்சில் நடைபெற உள்ள மிச்செலின் லெ மான்ஸ்..!

கடந்த 2023-ம் ஆண்டு தந்தை சுப்பிரமணியத்தை இழந்த அஜித், தாயாரையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இறுதிச் சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என அஜித் சகோதரர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். அதன்படியே இன்று (மே 31) காலை 8.30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்று முடிந்தன.

தாயார் மறைவால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கும் அஜித் குமாருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு வலிமை கொடுக்கும் வகையில் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மோகினி மணி தனது மகனின் வெற்றிக்கு எப்போதும் பின்புல ஆதரவாக இருந்தவர். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குடும்பத்தினருக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் அலைகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: இறந்து போனது எங்கள் அம்மா.. எங்கள் மனநிலையை மதிங்க.. ப்ளீஸ்..!! நடிகர் அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share