×
 

மிரட்டும் செல்வராகவன்.. கலக்கும் விஷ்ணு விஷால்..! முழுவதும் திக்..திக் மூடில் படம்.. 'ஆர்யன்' படத்தின் திரை விமர்சனம்..!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் செல்வராகவன் இணைந்து கலக்கும் 'ஆர்யன்' படத்தின் திரை விமர்சனம் இதோ.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மனநிலை சார்ந்த கதைகளும், மனஅழுத்தத்தை மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களும் அதிகம் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் இன்று திரையரங்குகளில் வெளிவந்த “ஆரியன்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பிரவீன் கே இயக்கியுள்ளார், நாயகனாக விஷ்ணு விஷால், முக்கிய வேடங்களில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த பட கதை சுருக்கம் என பார்த்தால், படம் துவங்குவது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன். அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் நெறியாளர் நயினா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்). அவரது நிகழ்ச்சியில் பிரபல நடிகர் ஒருவர் விருந்தினராக வருகிறார். அந்த நேரத்தில் திடீரென நிகழ்ச்சிக்குள் நுழையும் மர்மமான நபர் ஒருவர் அழகர் என்கிற நாராயணன் (செல்வராகவன்). அவர் அச்சமயத்தில் எச்சரிக்கையின்றி துப்பாக்கியால் அந்த நடிகரை காலில் சுடுகிறார். நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சி நேரடியாக கோடிக்கணக்கான மக்களின் கண்முன்னே ஒரு அதிர்ச்சியாக மாறுகிறது. போலீஸ், ஊடகம், பார்வையாளர்கள் என அனைவரும் உறைந்து போகும் சூழ்நிலையில், அழகர் தன்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தி, “என் எழுத்துக்களை யாரும் மதிக்கவில்லை,
இப்போது என் கதையை உலகமே பார்க்கும்” என்று கூறுகிறார். அதன் பிறகு அவர் அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகள் நடக்கும்,

அவற்றின் காரணத்தை யாரும் அறிய முடியாது என அறிவிப்பார். அதைச் சொல்லிய பிறகு, அவர் தன்னையே துப்பாக்கியால் சுட்டு சாவைத் தழுவுகிறார். இந்த வழக்கை விசாரிக்க அழைக்கப்படுகிறார் அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்). இவர் ஒரு கூர்மையான, ஆனால் உணர்ச்சியற்ற குற்றப்புலனாய்வாளர். செல்வராகவன் இறந்துவிட்டார் என்றே உறுதி, ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவர் சொன்ன பெயர்களில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். இது எப்படி சாத்தியம்? இறந்த ஒருவரால் இப்படி திட்டமிட்ட கொலைகள் எப்படி நடக்க முடியும்? அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ற இந்த கேள்விகளுக்கான பதிலே படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. இப்படி இருக்க இயக்குநர் பிரவீன் கே, ஒரு பழக்கப்பட்ட “சீரியல் கில்லிங்” கதையை எடுத்தாலும், அதை நுணுக்கமான மனஅழுத்தத்துடன், தத்துவ சிந்தனையுடன் சேர்த்து சொல்வதற்கு முயன்றுள்ளார். படத்தின் கதைக்களம் ஆரம்பத்திலேயே கொலையாளி யார் என்பதை வெளிப்படுத்திவிடுகிறது.

இதையும் படிங்க: சோமகாமா இருக்கீங்களா.. சந்தோஷமே இல்லையா..! அப்ப இதோ உங்களுக்காக 'ஆண்பாவம் பொல்லாதது' - திரை விமர்சனம்..!

அது பாரம்பரிய திரில்லர் பாணிக்கு மாறானது. ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள், அந்த மனிதனின் சிந்தனை, அவரின் மரணத்திற்குப் பிறகும் கொலைகள் நடப்பதற்கான விளக்கம் என இவை அனைத்தும் ஒரு புதிய வகை திரைக்கதை வடிவமாக காட்சியளிக்கின்றன. அவரது திரைக்கதை அமைப்பு வித்தியாசமானது, ஆனால் சில இடங்களில் பதட்டம் குறைவாக உணரப்படுகிறது. சில காட்சிகள் எதிர்பார்த்தபடி நடந்துவிடுவது திரைக்கதை ருசியை சிறிது குன்றச் செய்கிறது. விஷ்ணு விஷால் தனது கேரியரில் மனநிலை சார்ந்த கதைகளிலும், சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்தவர். அவரது அறிவுடை நம்பி பாத்திரம், அமைதியான தோற்றத்திலும், உள்ளுக்குள் குழப்பத்துடன் இருப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணை நடத்தும் காட்சிகளில், சிறிய முகபாவனைகள், அவரது பார்வை, மனக்குழப்பம் ஆகியவை சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் இப்படத்தின் பலம். அதேபோல் செல்வராகவனின் கதாபாத்திரம் திரைப்படத்தின் இதயமாகும். அவர் நடித்துள்ள அழகர் என்ற எழுத்தாளர், அவரின் நம்பிக்கை, விரக்தி, மனஅழுத்தம் அனைத்தும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.

அவரது ஒவ்வொரு வசனமும் பார்வையாளரை சிந்திக்க வைக்கிறது. “என் கதையை யாரும் கேட்கவில்லை.. இப்போது என் கதையைக் கேட்க உலகமே கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்ற வரி, படத்தின் தத்துவ நரம்பை வெளிப்படுத்துகிறது. அவரது நடிப்பு நிச்சயம் விருதுக்கு தகுதியானது. பத்திரிகை நிகழ்ச்சியில் திறமையாக நடிக்கும் நயினா என்ற பாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக இயல்பாக நடித்துள்ளார். அவரின் கண்ணீரோடு கூடிய மனக்கோபம், சிறிய இடைவெளிகளில் வெளிப்படும் உணர்ச்சிகள் அனைத்தும் அவரை மீண்டும் ஒரு முறை திறமையான நடிகையாக நிரூபிக்கின்றன. படத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் என்றால் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை. பாடல்கள் குறைவாக இருந்தாலும், பின்னணி இசை மட்டும் படத்தின் பதட்டத்தையும் மனஅழுத்தத்தையும் முழுமையாக ஏற்றி நிறுத்துகிறது. ஒவ்வொரு திருப்பத்திலும் இசை நம்மை திரையில் இருந்து விலக விடாது. ஒளிப்பதிவாளர் பயன்படுத்திய மங்கலான நிறங்கள், தாழ்ந்த ஒளி, நீண்ட ஷாட்கள் என திரைக்கதையின் மர்மத்தை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. எடிட்டிங் அதே அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளது. முக்கியமாக கிளைமாக்ஸின் கடைசி 15 நிமிடங்கள் —சிறந்த எடிட்டிங், ஒலி வடிவமைப்பு ஆகியவை பார்வையாளர்களை ஒரு நிமிடம்கூட அமைதியாக விடாது.

எனவே படத்தின் ப்ளஸ் என பார்த்தால்,  விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரின் சிறந்த நடிப்பு,  இயக்குனர் பிரவீன் கே எடுத்துக்கொண்ட வித்தியாசமான கதைக்களம், கொலையாளியை தொடக்கத்திலேயே காட்டிய தைரியம், ஜிப்ரானின் பின்னணி இசை, கிளைமாக்ஸில் சொல்லப்பட்ட தத்துவ கருத்து. அதே படத்தின் குறைகள் என்றால், சில காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக இருந்தன, கதாபாத்திரங்களுடன் முழுமையாக இணைந்து உணர முடியவில்லை, பதட்டம் குறைவாக இருந்த சில பகுதிகள், காதல் மற்றும் விவாகரத்து காட்சிகள் தேவையற்ற நீளத்தை ஏற்படுத்தின. இப்படத்தின் கருத்து “கொலை என்பது ஒரு கலை அல்ல, அது ஒரு சிதைந்த மனதின் வெளிப்பாடு” என்ற உண்மையை படம் நம்மிடம் முன்வைக்கிறது. ஒரு மனிதன் ஏன் தீயவன் ஆகிறான்? அவரை சமூகம் எவ்வாறு அதற்குத் தள்ளுகிறது? அந்த கோபத்தை யாரிடம் வெளிப்படுத்த வேண்டும்? இவை போன்ற சிந்தனைகள் படத்தின் முடிவிலும் நம்மை விட்டு பிரியாது.

ஆக “ஆரியன்” ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர். அது உங்களை அதிர்ச்சியடைய வைக்காது, ஆனால், சிந்திக்க வைக்கும். விஷ்ணு விஷால் – செல்வராகவன் – ஷ்ரத்தா மூவரின் நடிப்பு, ஜிப்ரானின் இசை, பிரவீன் கேயின் கதை சொல்லும் பாணி என இவை எல்லாம் சேர்ந்து இப்படத்தை ஒரு நல்ல சினிமா அனுபவமாக மாற்றுகின்றன. அதாவது, ஆரியன் சர்ப்ரைஸ் செய்யவில்லை, ஆனால் ஏமாற்றவும் இல்லை. ஒரு வித்தியாசமான திரில்லர் விரும்பும் ரசிகர்கள் இதை கண்டிப்பாக பார்க்கலாம். எனவே “ஆரியன்” – மனஅழுத்தத்துக்கும் மர்மத்துக்கும் இடையிலான ஒரு தத்துவ சினிமா பயணம். சில குறைகள் இருந்தாலும், ஒரு சிறந்த முயற்சி என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நடிகை தமன்னா முன்னாடி போனா.. இதமட்டும் பண்ணிடாதீங்க..! அப்புறம் அவர் கோபத்தில் கொந்தளித்தா கம்பெனி பொறுப்பல்ல..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share