×
 

நடிகைகள் என்ன உங்களுக்கு பொம்மைகளா..! மோசமாக மாறிவரும் ஹாலிவுட்.. கடுப்பில் பேசிய கிறிஸ்டென் ஸ்டீவர்ட்..!

நடிகைகள் என்ன உங்களுக்கு பொம்மைகளா என இயக்குநர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

ஹாலிவுட் திரையுலகம் என்றாலே பிரம்மாண்டம், புகழ், கோடிக்கணக்கான சம்பளம் என ஒரு மாய உலகம் பலரின் மனதில் உருவாகி இருக்கும். ஆனால் அந்த வெளிச்சமான உலகத்தின் பின்னால், குறிப்பாக நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்கள், பாகுபாடுகள் மற்றும் மன அழுத்தங்கள் குறித்து அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் அந்த மாயையை உடைக்கின்றன. அந்த வகையில், ஹாலிவுட் நடிகை கிறிஸ்டென் ஸ்டீவர்ட் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி, மீண்டும் ஒருமுறை ஹாலிவுட்டில் நடிகைகள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் உலக அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் கிறிஸ்டென் ஸ்டீவர்ட். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த அவர், 1999-ம் ஆண்டு தனது 8-வது வயதில் ‘தி தர்டீன்த் இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சிறுவயதிலேயே கேமரா முன் நிற்கத் தொடங்கிய கிறிஸ்டென், தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன், ஆரம்பத்திலேயே அவரை வேறுபடுத்திக் காட்டியது.

கிறிஸ்டென் ஸ்டீவர்டின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ‘ட்வைலட்’ திரைப்பட தொடர். பிரபல எழுத்தாளர் ஸ்டீபனி மேயரின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில், ராபர்ட் பாட்டின்சனுடன் இணைந்து நடித்த கிறிஸ்டென், உலகம் முழுவதும் இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறினார். ‘பெல்லா ஸ்வான்’ கதாபாத்திரம், அவருக்கு சர்வதேச அளவில் அடையாளத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

இதையும் படிங்க: Recruitment closed.. Chaos unlocked..! நடிகர் சித்தார்த்தின் 'Rowdy&Co' படத்தின் First Look ரிலீஸ்..!

பிரபலமான வணிக திரைப்படங்களில் மட்டுமல்லாமல், கிறிஸ்டென் ஸ்டீவர்ட் கலைப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்து வந்தார். குறிப்பாக 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பென்சர்’ திரைப்படத்தில், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது, விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த படத்தில், டயானாவின் மன வேதனை, தனிமை, அரச குடும்பத்தில் அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஆகியவற்றை கிறிஸ்டென் மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த நடிப்பு, அவருக்கு ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றுத் தந்தது.

திரை வாழ்க்கையோடு சேர்த்து, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் பல முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுத்தவர். 2017-ம் ஆண்டு, அவர் தன்னை ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக (LGBTQ) பொது வெளியில் அறிவித்துக் கொண்டார். இதன் மூலம், ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு ஊக்கமாக மாறினார். அதோடு, பிரபல ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் நிக்கோலஸ் மேயரின் மகளும், தனது நீண்ட நாள் தோழியுமான டைலான் மேயரை காதலிப்பதாகவும் அவர் அறிவித்தார். இந்த ஜோடி கடந்த ஆண்டு எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டது. இவர்களின் திருமணம், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.

இந்த நிலையில், நடிகையாக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கிறிஸ்டென் ஸ்டீவர்ட் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ‘தி க்ரோனாலஜி ஆப் வாட்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நடிகையாக இருந்து, திரைக்குப் பின்னால் இருக்கும் இயக்குநர் இருக்கையில் அமர்ந்த அனுபவம் குறித்து கிறிஸ்டென் பல இடங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஹாலிவுட்டில் நடிகைகள் நடத்தப்படும் விதம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த பேட்டியில், “ஹாலிவுட்டில் நடிகைகள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்” என்று அவர் நேரடியாக கூறியுள்ளார். மேலும், இயக்குநராக தனது திரைப்படம் குறித்து பேசுவதற்காக சந்திப்புகளில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “ஒரு நடிகையாக நான் இருந்தபோது, என்னிடம் பேசப்பட்ட விதமும், ஒரு இயக்குநராக அமர்ந்தபோது என்னிடம் பேசப்பட்ட விதமும் முற்றிலும் வேறுபட்டது. இப்போது என்னிடம் ஒரு அறிவுள்ள நபரிடம் பேசுவது போல பேசுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

இது, நடிகைகள் மீது ஹாலிவுட்டில் இருக்கும் பார்வை எவ்வளவு குறுகியதாக உள்ளது என்பதைக் காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இயக்குநர்களுக்கு அற்புதமான ஆற்றல்கள் இருப்பதாக ஒரு கருத்து ஹாலிவுட்டில் நிலவுவதாகவும், அந்த கருத்து பெரும்பாலும் ஆண்களால் உருவாக்கப்பட்டதாகவும் கிறிஸ்டென் கூறியுள்ளார். “நான் குறை கூற வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. ஆனால் உண்மையில் நடிகர்களை விட நடிகைகளின் நிலைதான் மோசமாக இருக்கிறது” என்று அவர் கூறியது, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, “நடிகைகள் பொம்மைகள் போல நடத்தப்படுகிறார்கள். ஆனால் நடிகர்களுக்கு அவ்வாறு நடப்பதில்லை” என்ற அவரது கருத்து, ஹாலிவுட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் பாலின பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.

பல நடிகைகள் தங்களது தோற்றம், வயது, உடல் அமைப்பு போன்ற விஷயங்களை வைத்து மட்டுமே மதிப்பிடப்படுவதாகவும், அவர்களின் அறிவும் படைப்பாற்றலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி வந்த நிலையில், கிறிஸ்டென் ஸ்டீவர்டின் இந்த பேட்டி அதற்கு ஒரு வலுவான சாட்சியாக பார்க்கப்படுகிறது. கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ஹாலிவுட்டில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இது முதல் முறை பேசுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் பல பேட்டிகளில், சம்பள வேறுபாடு, கதாபாத்திர தேர்வுகளில் உள்ள பாகுபாடு, பெண்கள் மீது சுமத்தப்படும் அழுத்தங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது இந்த நேர்மையான பேச்சு, சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், பலருக்கு அவர் ஒரு குரலாகவும் நம்பிக்கையாகவும் மாறியுள்ளார்.

மொத்தத்தில், குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, உலகளாவிய புகழ் பெற்ற நடிகை, பின்னர் இயக்குநராகவும் மாறியுள்ள கிறிஸ்டென் ஸ்டீவர்ட், தனது அனுபவங்களின் அடிப்படையில் ஹாலிவுட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துகள், ஹாலிவுட்டில் நடிகைகளின் நிலை குறித்து ஒரு தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்த துறையில் உண்மையான மாற்றங்கள் நிகழுமா என்பதை காலமே பதில் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: உங்கள் பொய்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டுமா..! நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசப்பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share