×
 

என் குரலை உங்களால் கேட்கமுடியாது.. இனிமேல் நான் பாடமாட்டேன்..! பிரபல பாடகரின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல பாடகர் ஒருவர் இனிமேல் நான் பாடமாட்டேன் என அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் இசை உலகின் தவிர்க்க முடியாத அடையாளமாக திகழ்ந்த பின்னணிப் பாடகர் அரிஜித் சிங், தனது பின்னணிப் பாடகர் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது, இந்திய இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தி திரைப்பட இசையில் உணர்வுகளின் குரலாக விளங்கிய அரிஜித் சிங்கின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அரிஜித் சிங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தான் இந்த விவாதங்களுக்குத் தொடக்கமாக அமைந்தது. அந்த பதிவில் அவர், “பின்னணிப் பாடகராக இனி எந்த புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை. இது எளிதான முடிவு அல்ல. ஆனால், ஒரு இசையமைப்பாளராகவும், இசையுடன் தொடர்புடைய பிற படைப்பூக்க முயற்சிகளிலும் எனது பயணம் தொடரும். இத்தனை ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டிருந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி வெளியான இந்த அறிவிப்பு, ரசிகர்களை பெரும் குழப்பத்துக்கும் வருத்தத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

 பல ரசிகர்கள் தங்களது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் அரிஜித் சிங்கின் பாடல்கள் ஒரு பகுதியாக இருந்ததாக உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். காதல், பிரிவு, வலி, நம்பிக்கை என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தனது குரலால் உயிர்ப்பித்தவர் என்றே பலரும் அவரை நினைவுகூறுகிறார்கள். 2013ஆம் ஆண்டு வெளியான ‘ஆஷிகி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தும் ஹி ஹோ’ பாடல், அரிஜித் சிங்கின் வாழ்க்கையில் மட்டுமல்ல, இந்தி சினிமா இசையிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரு பாடலின் மூலம் ஒரே இரவில் இந்தியாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக உயர்ந்தார் அரிஜித் சிங். 

இதையும் படிங்க: சிகப்பு சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியா..! அழகில் குறை வைக்காத நடிகை ஆஷிகா ரங்கநாதன்..!

அதன் பின்னர் ‘சுன் ரஹா ஹை’, ‘சம்ஜாவான்’, ‘கராப் ஹூன்’, ‘சாப் சபானா’, ‘ஹவாயேன்’, ‘கேசரியா’ என எண்ணற்ற ஹிட் பாடல்கள் அவரது குரலில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நிலைத்தன. அரிஜித் சிங்கின் சிறப்பே அவரது குரலில் இருக்கும் இயல்பான எளிமையும் ஆழமான உணர்ச்சியும் தான் என்று இசை விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதிக அலங்காரமோ, செயற்கை மெருகோ இல்லாமல், நேரடியாக மனதைத் தொடும் விதத்தில் பாடும் அவரது பாணி, இளம் தலைமுறையினரிடையே மட்டுமல்லாமல் அனைத்து வயதினரிடமும் அவருக்கு ஒரு தனித்த இடத்தை உருவாக்கித் தந்தது. அதனாலேயே, “ஒரு தலைமுறையின் குரல்” என்று பலர் அவரை வர்ணித்து வருகின்றனர்.

இந்தி மொழி மட்டுமின்றி, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடியுள்ள அரிஜித் சிங், தென்னிந்திய ரசிகர்களிடமும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளார். குறிப்பாக, தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் உன் அழகினிலே” பாடல், அவரது குரலுக்கு புதிய ரசிகர்களை உருவாக்கியது. மொழி தெரியாவிட்டாலும் உணர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் அவரது திறமை, இசைக்கு மொழி ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாக அமைந்தது.

அரிஜித் சிங்கின் இந்த ஓய்வு அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் இது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவு எனக் கூறும் நிலையில், சிலர் இசைத் துறையின் வணிகமயமாக்கல் மற்றும் அதிக பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அரிஜித் சிங் நேரடியாக எந்த விளக்கத்தையும் இதுவரை வழங்கவில்லை.

இசையமைப்பாளர்கள் பலரும் அவரது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். “ஒரு பாடலுக்கு உயிர் கொடுக்கும் அரிய திறமை கொண்ட குரலை இனி மிஸ் செய்வோம்” என்று பிரபல இசையமைப்பாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், அவர் ஒரு இசையமைப்பாளராக தொடரப் போவதாக அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களுக்கு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.

பின்னணிப் பாடகராக மேடையின் பின்னால் நின்றாலும், தனது குரலால் கோடிக்கணக்கான இதயங்களில் இடம்பிடித்தவர் அரிஜித் சிங். அவர் எடுத்துள்ள இந்த முடிவு, இந்திய திரைப்பட இசையில் ஒரு காலகட்டத்தின் முடிவாகவே பலரால் பார்க்கப்படுகிறது. இனி அவரது குரல் புதிய பாடல்களில் ஒலிக்காவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரிஜித் சிங்கின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு, இசை உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கினாலும், அவரது இசைப் பயணம் முற்றிலும் முடிவடையவில்லை என்பதே அவரது ரசிகர்களுக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளது. ஒரு பாடகராக அல்ல, ஒரு படைப்பாளியாக அவர் இனி எந்த வடிவில் ரசிகர்களை சந்திக்கப் போகிறார் என்பதை எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது இந்திய இசை உலகம்.

இதையும் படிங்க: விமர்சனம் ஆயிரம் வந்தாலும்.. மூன்று பாகங்களாக உருவாகும் 'அனிமல்'..! அட்டேட் கொடுத்த ரன்பீர் கபூர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share