×
 

ஜனநாயகன்.. பராசக்தி.. படங்களுக்கு வந்த திடீர் சிக்கல்..! CBFC சட்டப்படி படத்தில் இதெல்லாம் இருக்க கூடாதாம்.. லிஸ்ட் இதோ..!

CBFC சட்டப்படி படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இருக்க கூடாது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே அதிகமாக பேசப்பட்டு வரும் விவகாரங்களில் முதன்மையான ஒன்றாக நடிகர் விஜயின் கடைசி படம் என்று கூறப்படும் “ஜனநாயகன்” திரைப்படம் தொடர்பான தணிக்கை சிக்கல் உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்த படம், இன்னும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) தணிக்கை சான்றிதழ் பெறாத நிலையில் இருப்பதால், படக்குழு தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் எந்த ஒரு திரைப்படமும் பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட வேண்டுமென்றால், 1952ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட “சினிமாடோகிராப் சட்டத்தின்” படி, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் இருந்து தணிக்கை சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் இன்றி எந்த ஒரு படமும் திரையரங்குகளில் வெளியாக முடியாது. பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களாக இருந்தாலும், சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும், இந்த விதி அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும்.

இந்த நிலையில், “ஜனநாயகன்” படத்திற்கு இன்னும் சிபிஎப்சி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது, படத்தின் ரிலீஸை பெரிதும் பாதித்துள்ளது. இதன் காரணமாகவே, தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தை அணுகி, தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதே, படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: Netflix-ஏ போதுமாம்..!! Paramount கொடுத்த ஆஃபரை நிராகரித்தது Warner Bros..!!

இந்த விவகாரத்துடன் இணைந்து, தற்போது தணிக்கை குழு ஒரு படத்திற்கு சான்றிதழ் வழங்கும் போது எந்தெந்த விதிமுறைகளை பின்பற்றுகிறது என்பது குறித்த தகவல்களும் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளன. பொதுவாக பலருக்கும் தணிக்கை குழு என்றால் சில காட்சிகளை வெட்டுவது அல்லது வசனங்களை மியூட் செய்வது என்ற அளவிலேயே தெரியும். ஆனால் அதற்குப் பின்னால் பல அடுக்குகளான விதிமுறைகளும், நடைமுறைகளும் உள்ளன.தணிக்கை குழு, ஒரு திரைப்படத்தை பரிசீலனை செய்த பிறகு, மொத்தம் ஐந்து வகையான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றை வழங்குகிறது. அவை: U (Universal) – அனைத்து வயதினரும் பார்க்கக் கூடிய படம். U/A – குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்புடன் பார்க்க வேண்டிய படம். 

U/A 7, U/A 12, U/A 16 – குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பார்க்க வேண்டிய பிரிவுகள். A (Adult) – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட படம். இந்த சான்றிதழ்களை வழங்கும் போது, தணிக்கை குழு சில முக்கியமான அடிப்படை விதிகளை கடைபிடிக்கிறது. அதில் முதன்மையானது, மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அல்லது வசனங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதுதான். எந்த ஒரு மதத்தையோ, மத அடையாளங்களையோ, வழிபாட்டு முறைகளையோ இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தால், அதற்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

அதேபோல், இந்தியாவை, இந்திய அரசியலமைப்பை, தேசிய சின்னங்களை அல்லது பாதுகாப்புப் படைகளை இழிவுபடுத்தும் காட்சிகளும் முற்றிலும் அனுமதிக்கப்படாது. ராணுவம், காவல்துறை, பாதுகாப்புப் படைகள் தொடர்பான காட்சிகளில், அவற்றின் மரியாதையை குறைக்கும் வகையிலான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை நீக்கவோ மாற்றவோ தணிக்கை குழு உத்தரவிடும். வன்முறை காட்சிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, நேரடியாக கத்தியில் குத்துவது, ரத்தம் சிதறுவது போன்ற காட்சிகள் மிக வெளிப்படையாக இருந்தால், அவற்றை தணிக்கை குழு நீக்கிவிடும் அல்லது காட்சியின் தீவிரத்தை குறைக்கச் சொல்வார்கள். வன்முறையை ஊக்குவிக்கும் விதமான காட்சிகள் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை நோக்கம்.

பெண்கள் தொடர்பான காட்சிகளிலும் தணிக்கை குழு மிகுந்த கவனம் செலுத்துகிறது. பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகள், பெண்களின் மரியாதையை பாதிக்கும் காட்சிகள் இருந்தால், அவற்றை மியூட் செய்யவோ அல்லது முழுமையாக நீக்கவோ குழு உத்தரவிடும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லது காட்சிகளும் தணிக்கை குழுவால் அனுமதிக்கப்படாது.பலருக்கு தெரியாத இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், தணிக்கை குழுவில் “பெரும்பான்மை” என்ற நடைமுறை இல்லை என்பதுதான்.

அதாவது, குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு படத்திற்கு சான்றிதழ் வழங்க சம்மதித்தாலும், ஒரே ஒரு உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவித்தால், அந்த படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்படாது. இதன் காரணமாகவே, பல படங்கள் தணிக்கை சிக்கலில் சிக்கி தாமதமாகும் சூழல் உருவாகிறது. ஒரு உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த படம் மறு ஆய்வுக் குழு (Re-examining Committee) யிடம் அனுப்பப்படும். அங்கேயும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், படக்குழு அடுத்த கட்டமாக ரிவைசிங் கமிட்டி (Revising Committee) என்ற நடைமுறைக்கு செல்லலாம். இந்த குழு, முன்பிருந்த குழுக்களை விட விரிவாக படத்தை ஆய்வு செய்து, இறுதி முடிவை வழங்கும்.

இதற்குப் பிறகும், படக்குழுவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகும் உரிமையும் தயாரிப்பாளர்களுக்கு உள்ளது. கோர்ட்டில் தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி, தங்களுக்கு ஏற்ற வகையில் சான்றிதழ் பெற முயற்சி செய்யலாம். “ஜனநாயகன்” படக்குழு தற்போது இந்த சட்ட வழிமுறையையே பின்பற்றியுள்ளது. நடிகர் விஜயின் கடைசி படம் என்ற அடையாளம், இந்த விவகாரத்தை மேலும் உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களும், இந்த படம் எந்த வித தடையுமின்றி வெளியாக வேண்டும் என்பதே தங்களின் விருப்பமாக தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், சட்ட விதிமுறைகள் மற்றும் தணிக்கை குழுவின் பொறுப்புகளையும் புறக்கணிக்க முடியாது என்பதே இன்னொரு தரப்பின் வாதமாக உள்ளது. இந்த நிலையில், நாளை வெளியாக உள்ள நீதிமன்ற தீர்ப்பு, “ஜனநாயகன்” படத்தின் ரிலீஸ் குறித்து மட்டுமல்ல, எதிர்காலத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பேசும் திரைப்படங்கள் எவ்வாறு தணிக்கைக்கு உட்படுகின்றன என்பதற்கும் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையக்கூடும். தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிய, தமிழ் திரையுலகம் முழுவதும் தற்போது மூச்சை பிடித்தபடி காத்திருக்கிறது.

இதையும் படிங்க: டெல்லி தான் இந்தியாவா என சொன்னப்பவே டவுட் வந்துச்சி..! 'பராசக்தி' படத்துக்கும் செக் வைத்த தணிக்கை வாரியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share