×
 

வெறித்தனமான திரில்லர் அனுபவம்..! ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தும் "சரண்டர்"..!

ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தி வெறித்தனமான திரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளது சரண்டர் திரைப்படம், அதன் விமர்சனம் இதோ..

சினிமா என்பது வெறும் கற்பனையல்ல. சமுதாயத்தில் நடக்கும் உண்மைகளையும், நடைமுறையிலான சிக்கல்களையும் திரையின் மூலமாக சாட்சியமாக காட்டும் ஒரு கலை வடிவம். இந்த அடிப்படையை உறுதிப்படுத்தும் வகையில், இயக்குநர் கவுதமன் கணபதி தன் புதிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். உண்மையை போலவே இருந்தாலும், முழுக்க கற்பனையில் ஆனாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் பொதுத்தன்மை, பரபரப்பும், சிக்கல்களும் திரைப்படத்தின் கதைக்குரிய வலிமையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட இந்த படத்தின் கதை சுருக்கம் என பார்த்தால் இரட்டை மர்மங்கள், ஒரே முடிச்சு எனலாம்.. அதன்படி, சட்டமன்ற தேர்தல் நடக்க ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சூழலில், சென்னை நகரின் ஒரு போலீஸ் நிலையத்தில் 'சரண்டர்' செய்யப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி மர்மமாக காணாமல் போகிறது.

சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட இந்த ஆயுதம் எந்த விதமான தடயமும் இல்லாமல் மறைந்துவிட, அந்தப் பழி அந்தக் காவல் நிலையத்திலுள்ள போலீஸ்காரர் லால் மீது விழுகிறது. அதே சமயம், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பகிரும் நோக்கத்தில் உள்ளூர் ரவுடியான சுஜித்திடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது. இது இரட்டை மர்மங்களுக்கு வழிவகுக்கும் நேரம். ஒருபுறம் காணாமல் போன கைத்துப்பாக்கியை தேடி, பயிற்சி நிலையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தர்ஷன், லால் உடன் சேர்ந்து வழிகாட்ட முடியாத வழிகளில் பயணிக்கிறார். மறுபுறம், தேர்தலுக்கு இருந்த பணம் இல்லாமல் போனது, சுஜித்தை திடுக்கிடச் செய்கிறது. அவனது ஆட்கள் நாலாபக்கமும் தேடலில் ஈடுபடுகிறார்கள். இரண்டு வேறு பாதையில் நடந்துவரும் இந்த விசாரணைகள், ஒரு புள்ளியில் சந்திக்கும்போது, கதை எதிர்பாராத திசையில் செல்கிறது. கைத்துப்பாக்கியும், பணமும் எங்கே சென்றன? யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் காத்திருக்கின்றன. இரு மர்மங்களுக்கும் பின்னுள்ள உண்மைகள் என இந்தப் படம் முழுவதும் பரபரப்பை தரும் வகையில் இருக்கிறது. ஆகவே பயிற்சி நிலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக தர்ஷன், தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

கோபம், மனஉணர்வு, குழப்பம் என அனைத்தையும் மிக நுணுக்கமாக, தீவிரமுடன் வெளிப்படுத்துகிறார். ஒருவகையில் கதையின் நரம்பாக மாறுகிறார். அதேபோல் லால், தனது அனுபவத்தின் மூலம் கதையின் மிக முக்கியமான பாத்திரத்தில் 'ஸ்கோர்' செய்கிறார். கொதிக்கும் கோபத்தையும், வெளிப்படுத்த முடியாத ஆற்றாமையையும் சமநிலையில் காட்டுகிறார். வில்லனாக வரும் சுஜித், பாரம்பரிய வில்லன் பாணியில் இல்லாமல், மென்மையான முகபாவனைகளில் தீமையையும், சாமர்த்தியத்தையும் சேர்த்து சித்தரிக்கிறார். அவரது நடிப்பு அல்டிமேட்டாக உள்ளது. மேலும் பாதினிகுமார், அரோல் சங்கர், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேசுவரன், கவுசிக், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் வேடங்களில் முழு பொறுப்புடன் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்த ‘சரண்டர்’ பட ட்ரெய்லர்..! போலீஸ் காஸ்டியூமில் மாஸ் காட்டும் பிக்பாஸ் தர்ஷன்..! 

அதுமட்டுமல்லாமல் முனிஷ்காந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் செய்த காமெடி முயற்சிகள், இந்தக் கதையின் திரில்லர் சூழ்நிலையில் சரியாக அமையவில்லை என்றாலும், கவனிக்கத்தக்க யதார்த்தவாதத்தை அவர்கள் வழங்குகிறார்கள். ஒளிப்பதிவில் மெய்யேந்திரன், இருட்டிலும் ஒளி காண்பிக்கும் விதமாக, ஆச்சரியமான ஷாட்கள் மூலம் படம் முழுவதும் ஒரு அழுத்தமான உணர்வை உருவாக்கியுள்ளார். விகாஸ் படிசா வழங்கிய பின்னணிச் இசைகள் மற்றும் பாடல்கள், கதையின் ஸ்பீட்டை மேலும் உயர்த்துகின்றன. படத்தில் சில இடங்களில் காவல்துறை மீது நேரடி குற்றச்சாட்டுகளாக தோன்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதிகாரிகள் அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், சில தவறுகளை அப்படியே காட்டியிருப்பது வாதங்களுக்கு வழிவகுக்கும். "இது நிஜமா, இல்லையா?" என்பதற்கான பதில், பார்வையாளர்களின் பார்வையில் தான் உள்ளது. ஆனால், பயப்படாமல், சுதந்திரமாக, ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் உள்ளுணர்வுகளை நம் முன் வைக்கிறது என்பது மட்டும் உறுதி. இயக்குனர் கவுதமன் கணபதி, தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான கதையமைப்புடன், வேகமுள்ள திரில்லர் ஒன்றை வழங்கி அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஒன்றாகக் கலக்கியுள்ளார்.

காதல், காமெடி, களியாற்றல் இல்லாத ஒரு சுருக்கமான திரில்லர் படமாக இருக்கும் இப்படம் சினிமா வட்டாரத்தில் கண்டிப்பாக வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல இயற்கையாகவும், யாரும் கணிக்க முடியாத வகையிலும் கதையை எடுத்து செல்லும் முயற்சி, தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்..! நடிகர் சாந்தனுவை கண்ட பக்தர்கள் உற்சாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share