×
 

Love Insurance Kompany டெபாசிட் கூட வாங்காது போலையே..! படம் எப்படி இருக்கு தெரியுமா..? திரைவிமர்சனம் இதோ..!

LIK படைத்தை அனிருத், விக்னேஷ் சிவன், பிரதீப் இவர்களில் யாரை நம்பி பார்க்கலாம்..இதோ திரைவிமர்சனம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் வர முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள “Love Insurance Kompany” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முக்கிய காரணம், சமீப காலத்தில் பிரதீப் நடித்த படங்கள் தொடர்ந்து ரூ.100 கோடி வசூலை கடந்த வெற்றியைப் பதிவு செய்ததுடன், விக்னேஷ் சிவன் – பிரதீப் கூட்டணி என்ற புதிய இணைவு ரசிகர்களின் ஆர்வத்தை இரட்டிப்பாக்கியது.

இந்தப் படம் 2040ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது அதன் முதல் வித்தியாசம். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு எதிர்கால உலகை படத்தில் காட்டியுள்ளனர். அந்த உலகில் காதல் கூட ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எஸ்.ஜே. சூர்யா உருவாக்கிய “LiK” என்ற அப்ளிகேஷன், காதலர்கள் உண்மையாக உள்ளார்களா இல்லையா என்பதை கண்காணித்து தெரிவிக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.

இந்த அப்ளிகேஷனின் தாக்கம் காரணமாக, பல காதல் ஜோடிகள் தங்களது உறவை இழந்து பிரிவதைக் காண முடிகிறது. அதிலும், “Love Meter” என்கிற அப்டேட் மூலம் காதலின் சதவீதத்தை அளவிடும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுவது, கதையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைகிறது. இந்த அம்சம், மனித உணர்ச்சிகளையே ஒரு கணக்காக மாற்றும் சமூகத்தின் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிங்க: சமீபத்திய அரசியல் கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டிய "TN2026"..! படம் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ..!

கதாநாயகனாக வரும் பிரதீப் ரங்கநாதன், அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக காட்சியளிக்கிறார். இயற்கை மையப்படுத்தப்பட்ட “பசுமை உலகம்” என்ற இடத்தில் வளர்ந்த அவர், தொழில்நுட்ப உலகிலிருந்து விலகி வாழ்கிறார். இந்த பாத்திரம், இன்றைய தலைமுறைக்கு ஒரு எதிர்மறை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள கதாநாயகியை சந்திக்கும் அவர், முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். ஆனால், அவளுடன் தொடர்பு கொள்ளவும், தனது காதலை வெளிப்படுத்தவும் LiK அப்ளிகேஷன் அவசியமாகிறது. இதனால், தந்தைக்கு தெரியாமல் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தத் தொடங்கும் அவர், காதல் உலகில் நுழைகிறார்.

காதல் மலர்ந்த பிறகு, Love Meter மூலம் அவர்களின் உறவை பரிசோதிக்கும் போது வெறும் 3% மட்டுமே காட்டப்படுவது கதையில் அதிர்ச்சி திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கதாநாயகி பிரிவைத் தேர்வு செய்கிறார். இதற்குப் பிறகு, “ஒரு அப்ளிகேஷன் காதலை அளவிட முடியாது” என்பதை நிரூபிக்க முயலும் கதாநாயகனின் போராட்டமே படத்தின் மீதிக்கதையாக நகர்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை, பிரதீப் ரங்கநாதன் முழுப் படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். இருப்பினும், அவரது நடிப்பு சில இடங்களில் பார்வையாளர்களுடன் உணர்ச்சி ரீதியான இணைப்பை ஏற்படுத்த தவறுகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் எஸ்.ஜே. சூர்யா, எதிர்மறை வேடத்தில் இருந்தாலும், அவருக்கான திரைக்கதை வலுவாக இல்லாததால் அவரது திறமை முழுமையாக வெளிப்படவில்லை என்பது ஏமாற்றமாகும். பொதுவாக தனது வித்தியாசமான நடிப்பால் காட்சிகளை உயர்த்தும் அவர், இந்தப் படத்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கீர்த்தி ஷெட்டி, சீமான், கௌரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பைச் செய்திருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட கருத்து புதுமையானது என்பது மறுக்க முடியாத ஒன்று. சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அவர் வழங்க முயற்சித்துள்ளார். தொழில்நுட்ப உலகை விட்டு வெளியே வந்தால், இயற்கையிலும் மனித உறவுகளிலும் இருக்கும் அழகை உணர முடியும் என்பதே படத்தின் மைய கருத்தாகும்.

ஆனால், இந்த நல்ல கருத்தை வலுவான திரைக்கதையுடன் இணைக்கத் தவறியதே படத்தின் முக்கிய குறையாகும். குறிப்பாக இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவாகி, கதையின் வேகம் மந்தமாகிறது. நகைச்சுவை காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யவில்லை. இதேவேளை, இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தை முழுவதும் தாங்கிச் செல்கின்றன. “எனக்கென யாரும் இல்லையே”, “தீமா தீமா”, “அடாவடி” போன்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

டெக்னிக்கல் ரீதியாக, 2040ஆம் ஆண்டின் சென்னை நகரத்தை காட்சிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. விஷுவல்ஸ் மற்றும் சிறிய விவரங்களும் கவனிக்கத்தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், “Love Insurance Kompany” படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், புதுமையான கருத்து, இசை மற்றும் சில காட்சிகள் காரணமாக ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகூட நடிக்க முடியாது..! ஜெயிலர்-2ல் இருந்து விலகிய ஷாருக் கான்.. பதிலாக நெல்சன் இறக்கிய உச்சநட்சத்திரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share