ஒரே பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன்..! கோபத்தை கொட்டி தீர்த்த தொண்டர்கள்..!
முன்னாள் முதல்வர் மரணத்தை பற்றி எழுதிய பதிவால் நடிகர் விநாயகனுக்கு எதிராக போலீசில் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் வில்லன் ரோலாக இருந்தாலும் சரி அல்லது முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அதில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் நடிகர் தான் விநாயகன், இப்படி பட்ட இவர் சமீபத்தில் தனது சமூக ஊடகப் பதிவுகளால் மீண்டும் ஒரு முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் 'ஜெயிலர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வலம் வருகிற இந்த மலையாள நடிகர், இதற்கு முன்னதாகவும் தனது கருத்துகளால் மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கியவரே.
இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு, கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணம் அடைந்தபோது, அவரது உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலான இந்த ஊர்வலத்தினை யாரும் எதிர்பாராத வகையில் விமர்சித்த விநாயகன், "எனது தந்தையும் செத்தார். உம்மன் சாண்டியும் செத்தார்" என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த கருத்து பலரிடமிருந்து கடும் கண்டனங்களை அவருக்கு பெற்று தந்தது.
இதையடுத்து அவருக்கு எதிராக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் எந்தவிதமான சட்ட நடவடிக்கையிலும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த வழக்குகள் பின்னர் கைவிடப்பட்டன. இந்த சர்ச்சை இப்பொழுது வரை முழுமையாக அடங்கவில்லை என்ற நிலையில், கடந்த 21-ம் தேதி கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் விநாயகன், "இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் இறக்கவில்லை... எங்களுடனேயே வாழ்கிறார்" என கைகளை உயர்த்தி முழக்கமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதுடன் வைரலானது. இப்பொழுது அந்த வீடியோவின் தாக்கம் குறையுமுன்பே, விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவு மேலும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் அவர், "எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்..." என் பதிவிட்டிருக்கிறார். மேலும் சில ஒழுங்கற்ற வார்த்தைகளையும் பதிவிட்டு இருப்பது போல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மறைந்த ஸ்ரீதேவிக்காக கணவர் விபரீத செயல்..! நினைத்ததை சாதித்த போனி கபூர்.. பார்க்க மனைவி இல்லை என வருத்தம்..!
இந்த பதிவுகள், காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சித் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, உம்மன் சாண்டியின் மரணத்தை ‘வழக்கமான மரணம்’ என்று சாதாரணமாகக் குறைக்கும் வகையில் பேசியதாகக் கூறி, இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, கேரள இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில டிஜிபிக்கு அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் வன்மம், பகைமை மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைப் பகிர்ந்ததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விநாயகனின் சமூக ஊடக செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. திரை உலகிலும், அரசியல் வட்டாரத்திலும் இவருடைய பேச்சுக்கள் பொதுவெளியில் வாதங்களை உருவாக்கியிருக்கின்றன. இப்போது, முன்னாள் தலைவர்களின் மரணங்களை ‘வழக்கமான மரணம்’ என குறிப்பிட்டு, அதனை வெளிப்படையான பாணியில் கூறும் விதம், அவரது பதவி மற்றும் பொறுப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது எனவும், பல தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், மாநில காவல் துறையின் நடவடிக்கை குறித்து அனைவரும் கவனித்து வருகிறார்கள். விநாயகன் தன்னுடைய கருத்துகளை மீண்டும் விளக்கவாரா அல்லது மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ‘காதல்’ பட நாயகி நினைவிருக்கா...! சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் நடிகை சந்தியா..!