ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!
நடிகர் அஜித் குமார் தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை ஒரே காகிதத்தில் அழகாக முடித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மனதில் உற்சாக நாயகனாக இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். இவர் பார்க்க அழகாகவும் கலராகவும் இருப்பதினால் நடிக்க மட்டும் தான் செய்வார் என நினைத்தால் அதுதான் தவறு. அவர் ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த அஜித் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இப்படிப்பட்டவர், இதுவரைக்கும் தமிழில் மட்டுமே படங்களை நடித்து உள்ளார். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிசார்ந்த ரசிகர்களுக்காக இவரது படம் டப்பிங்கில் இன்றுவரை கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த அளவிற்கு வளர்ந்த நடிகர் அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு வெளியான "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், "அமராவதி" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்த அஜித் அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது. இதனை அடுத்து, அஜித் குமாரின் நடிப்பில் வெளியான "ஆசை" திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. அதன் பின்னர் இயக்குனர் சரணின் "காதல் மன்னன்" படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும், அஜித்குமாரின் ப்ளாக் பஸ்டர் படமாக பார்த்தால் 2002-ம் ஆண்டு வெளியான "தீணா" திரைப்படம் தான். இதற்கு பின்பு தான் அஜித்துக்கு "தல" என்ற பெயரை ரசிகர்கள் அன்புடன் வைக்க ஆரம்பித்தனர். இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: AFTER 36 YEARS... 'A' சான்றிதழுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் 'கூலி'..!
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் தனது சினிமா பயணத்தில் 33 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். இந்த முக்கிய தருணத்தில், அவர் தனது ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தற்போது இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அதன்படி அந்த அறிக்கையின் தொடக்கத்தில், "சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 ஆண்டுகள் நிறைவு செய்கிறேன். ஆனால் இதை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எண்களுக்கு நான் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு ஒவ்வொரு வருடமும் முக்கியம் தான். இது ஒரு சாதனையைப் பற்றிய பதிவு அல்ல, நன்றியைப் பற்றியது. இதற்கு முழுமனதுடன் கைகூப்பி நன்றி கூறுகிறேன்" என கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித் தனது பயணம் எவ்வளவு கடினமானதாக இருந்தது என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.. அதில், " இந்த பயணம் எனக்கு எளிதாக இருக்கவில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல், யாருடைய சிபாரிசும் இல்லாமல், முழுக்க முழுக்க என் முயற்சியால் இந்த துறையில் நுழைந்தேன். பல காயங்கள், தோல்விகள், மீண்டு வருதல், அமைதி... எல்லாவற்றையும் அனுபவித்தேன். ஆனால் தளரவில்லை. தொடர்ந்து முன்னேற முயற்சி செய்தேன்" என்றார்.. பின்பு விடாமுயற்சி என்பதை நான் அதை வாழ்ந்தே கற்றுக்கொண்டேன் என தெரிவித்து இருக்கிறார்.. அதன்படி, "வெற்றி, தோல்வி என அனைத்தும் நான் சந்தித்தேன்.. ஆனால் நான் மீண்டும் வருவதை உங்கள் அன்பு தான் வழிகாட்டியது.. குறிப்பாக எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் பார்த்திருக்கிறேன். என் வெற்றியில் கூட சந்தேகம் கொண்ட பல தருணங்களில், உங்கள் அன்பே என்னை மீண்டும் நிற்க வைத்தது. அந்த அன்புக்காக என்றும் உண்மையாய் இருப்பேன். உங்கள் அன்பை தவறாக பயன்படுத்துவதை எண்ணிக்கூட மாட்டேன்" என்கிறார்.
அடுத்ததாக தன்னுடைய வளர்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அதன்படி, " இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் என அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் தான் எனது பயணத்தில் முக்கியமானது" என்கிறார். அடுத்து " நான் அதிகம் வெளியே வராமலும், பேசாமலும் இருக்கலாம். ஆனால் சினிமாவிலும், மோட்டார் பந்தயத்திலும் எனது முழு கவனமும் செலுத்தி, உங்களை மகிழ்விக்க தவறியதில்லை" என்றவர் தனது மோட்டார் பந்தயப் பயணத்திலும் ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளார், அதனை தெரிவிக்கும் வகையில் " என் ரேஸிங் பயணத்திற்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. நம் நாட்டிற்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன்" என்றார்.. அறிக்கையின் இறுதியில், அஜித் குமார் தனது வார்த்தைகளை மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார்.. அதில், "என் நிறை குறைகளை ஏற்றுக்கொண்டு, என் மீது அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி. உங்களுக்கு என்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். வாழு – வாழ விடு என உணர்வு பூர்வமான நன்றி விழாவை ரசிகர்களுக்குத் திரும்பக் கொடுத்து இருக்கிறார் அஜித் குமார். இப்படியாக 33 ஆண்டுகள் என்ற ஒரு நீண்ட பயணம், அஜித் குமார் வாழ்க்கையில் எளிதாக நடந்து கொண்டதாக அல்ல. போராடி, மீண்டு வந்து, அமைதியாகவே இருந்தாலும், ஆழமாக பேசும் ஒரு மனிதராகவே அவர் தன்னை நிரூபித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலமாக, அவரது மனிதநேயம், நேர்மை, தன்னம்பிக்கை, மற்றும் நமக்கெல்லாம் சொல்ல வேண்டிய வாழ்வுப் பாடங்கள் சற்று வெவ்வேறு கோணத்தில் வெளிப்பட்டுள்ளன. அஜித் ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் இந்த அறிக்கை ஒரு வலிமையான உறுதியும், நன்றியுள்ள அறைகூவலுமாக அமைந்துள்ளது. இனியும் அவருடைய பயணம் வெற்றியடைய, ரசிகர்கள் எப்போதும் தங்கள் பாசத்தோடும், ஆதரவோடும் இருப்பார்கள் என்பது நிச்சயம்.
இதையும் படிங்க: ரஜினியின் ‘கூலி’ படத்தில் உலக நாயகனா..! அதிரடியான ட்விஸ்ட்களை களமிறக்கும் லோகேஷ் கனகராஜ்..!