×
 

என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல.. இப்ப அது என்ன வச்சி செய்யுது..!! காயம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனா என் உடம்புக்கு நான் ரெஸ்ட் கொடுக்கல என வருத்தப்பட்டு பதிவு செய்து இருக்கிறார்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். ஒரு ஆண்டில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக இருக்கும் ராஷ்மிகா, தனது கடின உழைப்பு, நேர்த்தி மற்றும் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். ஆனால், தொடர்ந்து இடைவிடாத படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட காயம் ரசிகர்களை கவலையடையச் செய்தது.

சில நாட்களுக்கு முன்பு, படப்பிடிப்பின் போது ராஷ்மிகாவின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் நடித்து வரும் சில படங்களின் படப்பிடிப்புகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், காயத்தின் தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால், ரசிகர்கள் பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஷ்மிகா தனது உடல்நிலை குறித்து தற்போது விரிவாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பதிவில் ராஷ்மிகா கூறியதாவது, “காயங்கள் மோசமானவை. இது யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. கடந்த சில நாட்களாக உங்களுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்ததற்கு மன்னித்துவிடுங்கள். இப்போது மீண்டும் உங்களிடம் பேச வருகிறேன்.” அதன்பின், தனது காயத்தின் தன்மை குறித்து அவர் மிகவும் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

“இது கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்தது. எனக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட மூன்றாவது காயம் இதுதான். இதற்குப் பிறகாவது என் உடலை ஒரு மனித உடலாகத்தான் நடத்த வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இதுவரை அதை ஒரு மெஷின் போல பயன்படுத்திக் கொண்டிருந்தேன். தொடர்ந்து வேலை, தொடர்ந்து படப்பிடிப்பு என்று ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் உடலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” தனது காயத்தின் மருத்துவ விவரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

“நமது இடுப்பை கால்களுடன் இணைக்க ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தசைநாண்கள் (Tendon) இருக்கும். அதில் என் வலது இடுப்பில் இருந்த ஒரு தசைநாண் கிழிந்துவிட்டது. அது மீண்டும் சரியாக இணையும் வரை காத்திருக்க வேண்டும். அது சரியான பிறகுதான் என்னால் காலை முழுமையாக தூக்க முடியும்” இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

“‘Mysaa’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் இந்த விபத்து நடந்தது. நான் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமான, அதிக உடல் உழைப்பு தேவைப்படும் படம் இதுதான். அந்த கதாபாத்திரத்துக்காக முழுமையாக என்னை அர்ப்பணித்தபோது இந்த காயம் ஏற்பட்டது” எனினும், ரசிகர்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வருத்தப்படாதீர்கள். வலி இருக்கிறது. ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. மெதுவாக குணமாகி வருகிறேன். உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துக் கொண்டிருக்கிறேன்” அவரது பதிவின் இறுதியில் எழுதியிருந்த ஒரு வரி ரசிகர்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. “நீயாக பிரேக் எடுக்க மாட்டாய்... அதனால் நானே உனக்கு ஒரு பிரேக் கொடுக்கிறேன் என்று கடவுள் சொல்வது போல இந்த சம்பவம் எனக்கு தோன்றுகிறது” இந்த வரிகள், தொடர்ந்து இடைவிடாமல் உழைத்ததன் விளைவாக ஏற்பட்ட சோர்வை அவர் உணர்ந்திருப்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஷ்மிகாவின் இந்த பதிவு வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “உடல்நலம்தான் முதலில் முக்கியம்”, “முழுமையாக குணமடைந்த பிறகே படப்பிடிப்புக்கு திரும்புங்கள்”, “உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்” என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

திரையுலகைச் சேர்ந்த பலரும் ராஷ்மிகாவுக்கு ஆதரவு தெரிவித்து, முழுமையான ஓய்வு எடுத்து உடல்நலத்தை முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ச்சியான படப்பிடிப்புகள், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பயணங்கள் காரணமாக நடிகர், நடிகைகள் பலரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வது புதிதல்ல. ஆனால், தனது காயம் குறித்து இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்திருப்பது ராஷ்மிகாவின் நேர்மையான அணுகுமுறையாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவரது அடுத்தடுத்த திரைப்படங்களின் படப்பிடிப்பு அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்பட்டாலும், ரசிகர்கள் அனைவரும் ஒரே குரலில் கூறுவது ஒன்று தான் – “படங்கள் காத்திருக்கலாம்... ராஷ்மிகா முழு உடல்நலத்துடன் திரும்பி வருவதே முக்கியம்.”

இதையும் படிங்க: ஹீரோக்களுக்கு வைத்த சூனியம் ஓவர்.. அடுத்து ஹீரோயின்களுக்கு..!! படப்பிடிப்பில் அடுத்த காயம்.. மருத்துவமனையில் ராஷ்மிகா மந்தனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share