ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!
ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தற்போது தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வரும் ரவி மோகன், சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் ‘புரோ கோட்’ என்ற பெயரில் புதிய படத்தை உருவாக்கி வருகிறார்.
கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்த தலைப்பே தற்போது சட்டரீதியான சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இந்த படத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ‘புரோ கோட்’ என்ற தலைப்பில் தான் சிக்கல், இதே பெயரில் மதுபானப் பொருள் தயாரித்து விற்கும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனத்தின் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ‘புரோ கோட்’ என்பது தங்களது பதிவு செய்யப்பட்ட வணிகச்சின்னம் (Trademark) என்பதால், அந்த பெயரை ஒரு திரைப்படத்திற்கு பயன்படுத்துவது சட்டத்தை மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து, அந்த நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸின் கோரிக்கையை ஏற்று, ‘புரோ கோட்’ தலைப்பை திரைப்படத்திற்குப் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு, படக்குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் ஸ்டுடியோஸ் தரப்பு, டெல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திரைப்படத்திற்குப் ‘புரோ கோட்’ தலைப்பை பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது எனவும், தங்களது கலைத்திறனை வணிக நிறுவனங்கள் கட்டுப்படுத்தக் கூடாது எனவும் ரவி மோகன் தரப்பு வாதிட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரவி மோகன் ஸ்டுடியோஸ் தரப்பின் கோரிக்கையை பரிசீலித்து, டெல்லி மதுபான நிறுவனம் திரைப்படத்துக்கான ‘புரோ கோட்’ தலைப்பைப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கூடாது என்று இடைக்கால தடை வழங்கியது. இந்த உத்தரவு ரவி மோகன் தரப்பிற்கு தற்காலிக நிம்மதியை அளித்தது.
இதையும் படிங்க: ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை தொடர்ந்து..! கஞ்சா வழக்கில் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் அதிரடி கைது..!
ஆனால் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை மீறி தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்கின்றதாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் குற்றஞ்சாட்டியது. இதை அடிப்படையாகக் கொண்டு, அந்த நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி, டெல்லி மதுபான நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மீறியது குறித்து விளக்கம் பெற தேவையுள்ளதாகக் கருதி, வழக்கின் மேலான விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீட்டிப்பதாகவும் அறிவித்தார்.
இதனால், தற்போது 'புரோ கோட்' பெயரைச் சுற்றியுள்ள சர்ச்சை இரு நீதிமன்றங்களிலும் தொடர்கிறது. ஒரு பக்கம் வணிகச்சின்ன உரிமை, மறுபக்கம் கலைச் சுதந்திரம் என்ற இரண்டு முக்கியமான சட்டக் கேள்விகள் இந்த வழக்கில் மோதிக்கொண்டுள்ளன. திரைப்படத் துறையில் ஒரு தலைப்பு கூட இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வருகின்ற சட்ட சிக்கல்கள் தற்போது பெரும் பேசுபொருளாகிவிட்டன.
ரவி மோகன் தரப்பினரின் அடுத்த நடவடிக்கை என்ன? டெல்லி மதுபான நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன? நீதிமன்றம் இறுதியாக எந்த தீர்ப்பை வழங்கும்? என்ற கேள்விகள் சினிமா வட்டாரத்திலும் சட்ட வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களே.. இன்று மாலை 05.30 மணிக்கு ரெடியாகுங்க..! "ஜனநாயகன்" பெரிய சர்ப்ரைஸ் ரிலீஸாம்..!