தியேட்டர்ல சாமியாடியது எல்லாம் பிளான்-ஆ..!! இது PR Team வேலையா.. 'கருப்பு' பட இருக்குநர் RJ பாலாஜி பேச்சு வைரல்..!
'கருப்பு' பட இருக்குநர் RJ பாலாஜி ரசிகர்கள் சாமியாடியது குறித்து பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய கம்பேக் தற்போது நனவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், நடிகர் சூர்யா தனது கெரியரில் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை தேடி வந்தார். அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது இயக்குநரும் நடிகருமான RJ பாலாஜி இயக்கியுள்ள கருப்பு திரைப்படம். வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக “கருப்பு” உருவெடுத்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலங்களில் பெரிய நடிகர்களின் பல படங்கள்கூட இந்த அளவிலான வரவேற்பைப் பெறாத நிலையில், “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே ஒரு திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளிலிருந்தே ஹவுஸ்ஃபுல் பலகைகள் தொங்கியதுடன், ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து, ஆட்டம் பாடலுடன் படத்தை கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அதன் கதைக்களமும், ஊராட்சித் தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதையும் பார்க்கப்படுகிறது. கிராமத்து நம்பிக்கைகள், ஊர் எல்லைச்சாமி மரபு, மனிதர்களின் வாழ்க்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், நகர்ப்புற ரசிகர்களையும் கிராமப்புற மக்களையும் ஒரே நேரத்தில் கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளிலும், கருப்புசாமியை மையமாகக் கொண்ட சில முக்கிய காட்சிகளிலும் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு சாமி ஆடியதாக கூறப்படும் வீடியோக்கள் இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டன.
இதையும் படிங்க: விஜயாவை பழிவாங்க நியூ பிளான்.. அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி..!! செய்வதறியாது திணறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!
ஆனால், இந்த வீடியோக்கள் வெளியாகிய பிறகு சமூக வலைதளங்களில் சர்ச்சையும் கிளம்பியது. சிலர், “தியேட்டர்களில் சாமி ஆடுபவர்கள் உண்மையான ரசிகர்கள் அல்ல; தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பணம் கொடுத்து அனுப்பப்பட்டவர்கள்” என்று விமர்சனம் செய்யத் தொடங்கினர். குறிப்பாக சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள், இது திட்டமிட்ட ப்ரமோஷன் யுக்தி என குற்றஞ்சாட்டினர். இதனால் “கருப்பு” படத்தைச் சுற்றி புதிய விவாதம் உருவானது.
இந்த விமர்சனங்களுக்கு தற்போது RJ பாலாஜி நேரடியாக பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “எங்களால் அந்த அளவுக்கு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பி இருக்க முடியாது. உண்மையாகச் சொன்னால், அப்படி செய்ய வேண்டுமென்றால் அது படத்தோட பட்ஜெட்டை விட அதிகமாக இருந்திருக்கும்” என்று நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் பதிலளித்தார். அவரது இந்த பதில் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் பேசிய அவர், “கருப்புசாமி என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ மதத்திற்கோ மட்டும் சொந்தமான தெய்வம் அல்ல. அவர் ஊர் எல்லைச்சாமி. ஊருக்குள் வரும்போதும் வெளியே போகும்போதும் மக்கள் கும்பிட்டு செல்லும் ஒரு நம்பிக்கை. ஜாதி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து மக்கள் அந்த தெய்வத்தை தங்களுடைய சாமியாக நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தியேட்டருக்கே வந்து அந்த உணர்வோடு படத்தை கொண்டாடுகிறார்கள். அதை பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
RJ பாலாஜியின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற ரசிகர்கள், “கருப்புசாமி வழிபாடு என்பது உணர்ச்சியோடு தொடர்புடையது. அதை புரிந்துகொள்ளாமல் சிலர் தவறாக விமர்சிக்கிறார்கள்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சிலர், மத உணர்வுகளை மையமாக வைத்து படங்களை மார்க்கெட்டிங் செய்வது ஆபத்தான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சூர்யா ரசிகர்கள் இந்த வெற்றியை ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். கடந்த சில படங்களின் தோல்வியால் விமர்சனங்களை சந்தித்த அவர், தற்போது “கருப்பு” மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக அவரது நடிப்பு, உடல் மொழி, கிராமத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ற திரைநிலை ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன. பல திரைப்பட விமர்சகர்களும், “இது சூர்யாவின் கெரியரில் மிகவும் முக்கியமான திருப்பம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
திரையுலக வட்டாரங்களில் தற்போது “கருப்பு” படத்தின் அடுத்த கட்ட வசூல் குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் வாரத்தில் ரூ.200 கோடியை கடந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் ரூ.300 கோடி கிளப்பிலும் படம் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் வசூல் சாதனைகள், மறுபுறம் சமூக வலைதள விவாதங்கள் என கருப்பு திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. ரசிகர்களின் உணர்ச்சி, ஆன்மீக நம்பிக்கை மற்றும் வணிக வெற்றி ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்தப் படம் உருவாக்கிய தாக்கம், இன்னும் பல நாட்கள் தொடரும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படிங்க: இப்பொழுது தான் உண்மையான "ஜெய் பீமே" ஸ்டார்ட் ஆகுது..!! விசிகவுக்கு சமூக நீதித்துறை கொடுத்த CM விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து..!