மண்சோறு சாப்பிட்டா படம் ஓடுமா..? விளாசிய சூரி.. பாராட்டிய வைரமுத்து...!
தனது ரசிகரை திட்டிய நடிகர் சூரியை பாராட்டி பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
நடிகர் சூரியின், மாமன் படம் வெளியான நிலையில் படம் வெற்றியடைய மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நடிகர் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நடத்தி இருந்தனர் அவரது ரசிகர்கள் சிலர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரது ரசிகர் ஒருவர், மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாட வேண்டும். முதன்முதலாக எங்கள் அண்ணன் சூரி எழுதி நடித்து இருக்கும் இந்த படம் அவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருக்க வேண்டும்.
இதனை எல்லாம் மனதில் வைத்து தான் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வந்து வேண்டி இருக்கிறோம். படம் வெற்றி அடைவதற்காகவே மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறோம். படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் குடும்பத்துடன் சென்று அனைவரும் பாருங்கள். முருகன் துணை அண்ணனுக்கு இருக்கும் வரை அவருக்கு தோல்வியே இல்லை என்று அவரது ரசிகர் மகிழ்ச்சியுடன் பேசி சென்றார்கள்.
இதையும் படிங்க: முருகனே உங்கள மன்னிக்க மாட்டார்.. இப்படி பண்றவங்க எனக்கு ரசிகரா இருக்க தகுதியே இல்லை.. சூரி ஆவேச பேச்சு..!
இதனை குறித்து நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் கேட்க, திடீரென கோபத்தில் கொந்தளித்த அவர், "மாமன் படம் வெற்றியடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை உண்மையில் என் தம்பிகள் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது எனக்கு. எதற்க்காக இப்படி செய்கிறீர்கள், கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக இந்த படம் ஓடும். நீங்கள் செலவு செய்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் மகிழ்ந்து இருப்பேன் அவர்களும் என் தம்பிகளாக இருக்க தகுதியடையவர்களாக இருப்பார்கள். இப்படியான விஷயங்களை இனிவரும் காலத்தில் யாரும் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என வேதனையுடன் கூறி சென்றார்.
இதனை பார்த்த வைரமுத்து நடிகர் சூரியை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார். மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது.
இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும் மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும் பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’என்று பாராட்டுகிறேன் என பதிவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினியின் அண்ணாத்தையா.. SK-வின் நம்ம வீட்டு பிள்ளையா.. சூரியின் 'மாமன்' படத்தை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்..!