காமெடி கலாட்டாவுடன் திரும்பி வருகிறது 'சுந்தரா ட்ராவல்ஸ்'..! "கூலி"க்கு முன்னாடி பிரம்மாண்ட ரீ-ரிலீஸ்..!
கூலிக்கு முன்னாடி காமெடி கலாட்டாவுடன் பிரம்மாண்டமாக 'சுந்தரா ட்ராவல்ஸ்' ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் வெளியாகி, ரசிகர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அளவிற்கு சிரிக்க வைத்த காமெடி திரைப்படமாக அறியப்படும் படம் என்றால் அதுதான் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இந்த படம் 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான போது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இனிமையான கதை, சாதாரண கதாபாத்திரங்கள், தமிழ்நாட்டு கிராமப் பின்னணியில் நிகழும் சுவாரசியமான காமெடி சம்பவங்கள் என்று கோர்த்துக் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம், தற்போது மீண்டும் ஒரு முறை ரசிகர்களை சந்திக்கவுள்ளது.
அதன்படி, இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், படத்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தில் முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தி, ரம்யா, மனோபாலா, தொட்டா சின்னு, சந்தானபாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஆ.சி.திருலோகசுந்தரம் இயக்கிய இப்படத்திற்கு, பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இது ஒரு பழைய பேருந்தை வைத்துக்கொண்டு நடத்தப்படும் ஒரு பயண சேவையின் கதையாக பார்க்கப்படுகிறது. அந்த பேருந்து தான் "சுந்தரா ட்ராவல்ஸ்". அந்த பேருந்தை வைத்திருக்கும் முரளி, அவருக்கு நண்பனாக இருப்பவர் வடிவேலு. இருவரும் வழக்கமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், காதல், சண்டை, ஏமாற்றம், மனவேதனை போன்ற எளிமையான திருப்பங்களுடன் படம் நகர்கிறது. இந்தப் படத்தின் முக்கிய சிறப்பம்சமே நடிகர் வடிவேலு மற்றும் முரளி ஆகியோரின் காமெடி கலாட்டா தான்.
படத்தில் வரும் பல காட்சிகள் இன்றும் நெஞ்சில் பதிந்து இருக்கின்றன. குறிப்பாக, வடிவேலுவின் ஒவ்வொரு முகபாவனைகளுக்கும் ரசிகர்கள் திரையில் சிரித்து ரசித்தனர். இப்படிப்பட்ட ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ இன்று வரை ரசிகர்களிடம் ஒரு கல்ட் தொடர்பை பெற்றிருக்கிறது. சன் டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் இந்த படம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதிக டிஆர்பி-ஐ சம்பாதித்து வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறைகளில் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதற்கு ஏற்ற படம் என்பதால், இப்போது ரீ-ரிலீஸ் என்ற செய்தி அதிகப்படியான ஆர்வத்தை கிளப்பி இருக்கிறது. பல ரசிகர்கள் இப்போது தங்களது குடும்பத்தினருடன், பிள்ளைகளுடன் திரையரங்கிற்கு சென்று இப்படத்தை பெரிய திரையில் மீண்டும் பார்க்க தயாராக உள்ளனர்.
இதையும் படிங்க: அரசியலை தாண்டி திரையுலகில் களமிறங்கும் வாரிசுகள்..! விஜய் மகனை தொடர்ந்து களத்தில் ஷங்கர் மற்றும் உதயநிதி மகன்..!
இப்படி இருக்க இந்த படம் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அதிக கேட்கப்படும் எதிர்பார்ப்பு காரணமாக கூடுதல் ஷோக்கள் கூட ஏற்பாடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவரும் பல காமெடி திரைப்படங்கள் கூட, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’-க்கு இணையாக வர முடியவில்லை என்றே பல விமர்சகர்கள் கூறுகிறார்கள். காரணம் அந்தக் காலத்தின் அழுத்தமில்லா, அக்கறையுள்ள காமெடி. எதையும் அதிகமாக சொல்லாமல், எளிமையாக சிரிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கதையமைப்பு தான். இப்போது மீண்டும் இப்படம் திரையரங்கிற்கு வருவதால், அது அந்த அழகான காலத்தை மீண்டும் நினைவு கூறும் வகையில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படமாக ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ மீண்டும் தோன்றி வருகிறது. மொத்தத்தில், "சுந்தரா ட்ராவல்ஸ்" என்பது வெறும் படம் மட்டுமல்ல.. அது ஒரு காலத்தின் நினைவுகள், ஒரு தலைமுறையின் சிரிப்பின் அடையாளம்.
ஆகஸ்ட் 8-ம் தேதி, மீண்டும் அந்த சிரிப்பு திரையில் ஒலிக்கப் போகிறது. உங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் திரைக்கு சென்று அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க மறந்துவிடாதீர்கள்.
இதையும் படிங்க: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மீண்டும் திருமணம்...! பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடந்த நிகழ்வு..!