×
 

புதருக்குள்ள பெண்களுக்கு என்ன வேலை.. கொச்சையாக பேசிய எஸ்.வி.சேகர்..! காட்டமாக பதிலடி கொடுத்த பாடகி சின்மயி..!

எஸ்.வி.சேகர் பெண்களை குறித்து தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்த இரண்டு விதமான பாலியல் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி கொடூரமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே வெறும் 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு காட்டுப் பகுதியில் இரவு முழுவதும் பரிதவித்து, காலையில் பல கிலோமீட்டர் நடந்து மருத்துவமனை சென்றடைந்த சம்பவமும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மீதான கோபத்தையும் கவலையையும் பெரிதும் தூண்டியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெண்கள் பாதுகாப்பு, சட்ட-ஒழுங்கு, பொதுவிடங்களின் பாதுகாப்பு, குறிப்பாக கழிப்பறை வசதிகளின் இல்லாமை போன்ற முக்கியமான கேள்விகளை மீண்டும் மீண்டும் சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளன. இந்நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், செய்தியாளர் சந்திப்பில் அளித்த கருத்துகளால் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறைவாக இருக்கும் சூழலில் அவர்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பிய அவர், “என் வீட்டில் வேலை பார்க்கும் பெண் சோப்பு வேண்டும் என்றால் கூட வெளியே அனுப்ப மாட்டேன். 

சட்ட ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள். அந்த பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்? புதருக்குள் போலீஸ் ஒளி விட்டுப் பார்ப்பாங்கலா?” என்று பேசியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள், இணைய பயனர்கள் பலர், இந்தக் கருத்து பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களையே குற்றவாளிகளாக்கும் வகையில் உள்ளது என்ற ஆட்சேபனையை முன்வைத்துள்ளனர். “பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதுதான் பாதுகாப்பு” எனும் பிதாமக மனப்பான்மை கொண்ட கருத்துகளாக இது பார்க்கப்பட்டு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான 'லீடர்'..! ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முக்கூட்டியே வெளியாவதாக தகவல்..!

இதற்கிடையில், #MeToo இயக்கத்தில் முக்கியமான குரலாக இருந்த பாடகி சின்மயி ஸ்ரீபாதா, எஸ்.வி. சேகர் கருத்துக்கு நேரடியாக பதிலடி அளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு, சமூகத்தில் பெரும் விவாதத்துக்கு வழிவகுக்கிறது. சின்மயி பதிவில், “விளாத்திக்குளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஏன் புதருக்குப் பின்னால் சென்றார் என்று எஸ்.வி. சேகர் கேட்கிறார். கழிப்பறை வசதிகள் இல்லாத பல கிராமங்களில், குறிப்பாக பெண்கள், இயற்கை உபாதைகளுக்காக விலகிப் போவது வழக்கமான விஷயம் என்பதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை. இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற சூழலில் பாலியல் வன்முறைக்கு ஆளாகுவது அடிக்கடி நடக்கும் உண்மை,” என கூறியுள்ளார்.

மேலும் அவர், “ஆண்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பாக, எந்த பயமுமின்றி சிறுநீர் கழிக்க முடியும்; அந்த சுதந்திரம் பெண்களுக்கு இல்லை. இந்த வேதனையை ஒரு சமூகத்துக்கேற்ப அணுகாமல், ‘ஏன் புதருக்குப் போனார்?’ என கேட்பது அவர்களின் துயரத்தை இகழ்வதாகும்,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சின்மயியின் இந்த பதிவு ஆயிரக்கணக்கானபேரால் பகிரப்பட்டு, பலர் ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர், “ஒரு பெண் கூட கழிப்பறைக்கு செல்ல பாதுகாப்பு தேவைப்படும் நாடு இது” என்று வலி கூற, மற்றொருபுறம், “சம்பவத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பும் பேச்சு இது” என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவாதங்கள் சூடுபிடிக்கும் நிலையில், எஸ்.வி. சேகர் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தன்னை “தவறாக அர்த்தப்படுத்த வேண்டாம்” என்றும், சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் ஒரு புதிய எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால் விமர்சகர்கள், “பெண்கள் பாதுகாப்பின் சாராம்சத்தை புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்; சர்ச்சை எழுந்ததால் மட்டுமே மன்னிப்பது போதாது” என்று கூறுகின்றனர்.

விளாத்திக்குளம் மற்றும் மதுராந்தகம் சம்பவங்கள் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகளை வேகமாக பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்து வருகிறது. இந்த இரண்டு விதமான சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்பு, கழிப்பறை வசதி, கிராமப்புற அடிப்படை வசதிகள், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்ட அமல்படுத்தல் போன்ற பல முக்கிய பிரச்சினைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம் பெண்கள் பாதுகாப்பு குறைவாக இருப்பது குறித்து மனச்சோர்வு, மறுபுறம் அதை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து சமூக கோபம் என இவை இரண்டும் தற்போது இணையத்தளங்களில், ஊடகங்களில், சமூக மன்றங்களில் வலுவாக ஒலிக்கின்றன.

இதையும் படிங்க: நீச்சல் உடை போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..! லவ்வில் ரசிகர்கள்.. குவியும் லைக்குகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share