×
 

மறைந்த ஏ.வி.எம் சரவணன்..! அஞ்சலி செலுத்த வந்த சிவகுமார் கூறிய உண்மை.. சூர்யாவின் பெயர் குறித்து விளக்கம்..!

மறைந்த ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சிவகுமார் உண்மையை உலகத்திற்கு கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த இந்தியத் திரைப்பட வரலாற்றின் முக்கிய தூண்களில் ஒருவர், பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இன்று அதிகாலை காலமானார். வயது மூப்பே காரணமாக என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் மறைந்த செய்தி வெளிவந்ததும் முழு தமிழ் திரைப்பட உலகமும், அரசியல் வட்டாரங்களும் பெரும் துயரத்தில் மூழ்கின.

இப்படி இருக்க சரவணன் அவர்களின் உடல் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோ வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏ.வி.எம். ஸ்டுடியோ என்பது தமிழ் திரைப்பட வரலாற்றின் இதயம் எனக் கூறப்படும் இடம். அந்த இடத்திலேயே சரவணன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருப்பது பலருக்கும் உணர்ச்சியூட்டும் தருணமாக அமைந்தது. முழு ஸ்டுடியோ வளாகமும் கருப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டன. அதிகாலை முதலே மக்கள் அலை வரத் தொடங்கியது. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என தமிழ்த் திரையுலகின் ஆளுமைகள் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தமிழக முதல்வர், பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஏ.வி.எம். சரவணன் அவர்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பு செய்தவர் என்பதால் அரசியல் வட்டாரங்களின் பங்கேற்பு அதிகம் காணப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பல தலைவர்கள் “தமிழ் சினிமா உலகம் இன்றைக்கு ஒரு தந்தையை இழந்துள்ளது” எனக் குறிப்பிட்டனர். இந்நிலையில், நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா இருவரும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வந்தடைந்து, சரவணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியே வந்த நடிகர் சிவக்குமார் உணர்ச்சி வசப்பட்டார். கண்களில் கண்ணீர் நின்றபடி செய்தியாளர்களிடம் அவர் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரின் மனதையும் தொடுவதாக இருந்தது.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு..! ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் இரங்கல்..!

அதன்படி, “என்னுடைய சொந்தப் பெயர் பழனிசாமி. நான் சினிமாவில் வரும்போது என் பெயரை எளிமையாகவும், நினைவில் நிற்கும்படியாகவும் மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அப்போது சரவணன் சார் தான் ‘சிவக்குமார்’ என்ற பெயரை எனக்கு வைத்தார். இன்று நான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறேனெனில் அந்த பெயருக்கே ஒரு பங்கு உண்டு. அந்த பெயரை எனக்கு அளித்தது அவர்தான்” என்றார். இவ்வாறு அவர் எமோஷனலாக தெரிவித்தபோது, அவரைத் தொடர்ந்து நிற்கும் சூர்யாவின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. மேலும் சிவக்குமார் பேசும்போது, அவரது உணர்ச்சி உச்சத்தை எட்டியது.

அதன்படி, “சரவணன் சார் என் வாழ்க்கையில் ஒரு தந்தைபோல் இருந்தார். நான் பெற்ற அந்த நன்றியை மறக்க முடியாது. அதற்காகத்தான் என் முதல் மகனுக்கு நான் ‘சரவணன்’ என்று பெயர் வைத்தேன். அந்த நினைவாக என் வாழ்க்கையே அவருடன் இணைந்தது” என்றார். இந்த ஒரு வரியால் அங்கிருந்த பலரும் கண்கலங்கினர். ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் இந்திய சினிமாவின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. ஏ.வி. மெய்யப்பன் தொடங்கி வைத்த இந்த நிறுவனத்தை சரவணன் புதிய உயரங்களுக்கு எடுத்துச்சென்றார். அவரது தயாரிப்பில் வெளிவந்த, நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், அயன், வேட்டைக்காரன், மின்சார கனவு, சிவாஜி போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான மைல்கற்களாகும்.

அவரது மறைவுச் செய்தி வெளியானதும், பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் துயரத்தைப் பதிவு செய்தனர். தமிழ் சினிமா உலகம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி திரைப்பட வட்டாரங்களிலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்துகொண்டே இருக்கும் நிலை காணப்பட்டது. அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட இருக்கிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொழில்துறை நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரைப்பட வரலாற்றின் ஒரு பொற்காலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. சரவணன் போன்ற ஒரு நபரை இழந்த துயரில் முழு திரையுலகமும் மூழ்கியுள்ளது. அவரது பெயரால் சிவக்குமார், சூர்யா இருவரும் உருகியிருப்பது, அவர் மனிதநேயத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த சேவை எப்போதும் மறக்க முடியாத ஒன்று. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

இதையும் படிங்க: காற்றில் கலந்தார் ஏவிஎம் சரவணன்..நேரில் திரண்ட திரையுலகம்..!! கண்ணீர் மல்க அஞ்சலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share