மாஸ் ஹிட் கொடுத்த “தலைவன் தலைவி”..! படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு..!
படத்தின் வெற்றியை கொண்டாடிய “தலைவன் தலைவி” படக்குழுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 25-வது நாளை நிறைவு செய்துள்ளது. 'தலைவன் தலைவி' என்பது விஜய் சேதுபதியின் 52-வது படம் என்பதோடு, பெரும்பாலான விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நேர்மையான பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். 'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' என தொடர்ந்து குடும்ப தழுவல் கொண்ட படங்களை கொடுத்த இவர், 'தலைவன் தலைவி' மூலம் மீண்டும் தனது வழக்கமான பாணியில், மனித உணர்வுகளுடன் கூடிய குடும்பக் கதையாக பதிவு செய்திருக்கிறார். 'தலைவன் தலைவி' ஒரு சாதாரண காதல் படம் அல்ல. இது திருமணத்திற்கு பிறகு துவங்கும் உண்மையான வாழ்கையின் சிக்கல்களை சித்தரிக்கிறது. இப்படம் கணவன் - மனைவி உறவில் ஏற்படும், கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள், விரிசல்கள், கோபம், அதன் பின்னர் அன்பும், சேர்ந்து வாழும் முயற்சிகளும், எல்லாவற்றையும் உணர்ச்சிப் பூர்வமாகவும் நேர்த்தியாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். திருமணத்துக்கு பிறகும் காதல் வாழலாம், விவாகரத்தே முடிவல்ல என்பது போன்ற நல்ல சமூகக் கருத்தை இந்த படம் எளிமையாகவும் உணர்வோட்டத்துடன் கூறுகிறது.
இப்படி இருக்க விஜய் சேதுபதி கதையின் நாயகனாக, ஒரு சாதாரண குடும்ப மனிதனின் போராட்டங்களை மிகவும் நுணுக்கமாகவும் உணர்ச்சிவசப்பட்டு நடித்துள்ளார். மேலும் நித்யா மேனன், இப்படத்தின் நாயகியாக தனது நாடகத் திறமையையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் நன்கு கையாண்டு இருகிறார். கடந்த வருடம் தேசிய விருது வென்ற அவர், மீண்டும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்திருக்கிறார். யோகி பாபு, வழக்கமான நகைச்சுவை மட்டுமின்றி, சில முக்கியமான காட்சிகளில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருகிறார். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, இந்தப் படம் தனது தனித்துவத்தை இசையின் வாயிலாகவும் வெளிப்படுத்தியுள்ளது. பின்னணி இசை பல இடங்களில் உணர்வுகளை கட்டியெழுப்பும் வகையில் அமைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன, குறிப்பாக “மறக்க முடியுமா” என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ஜூலை 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தலைவன் தலைவி’, தமிழகத்திலும் மற்றும் பிற மாநிலங்களிலும் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்து தற்போது வரை ரூ.95 கோடிக்கு மேல் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தினமும் புதுசு புதுசா பரோட்டா செய்து கொடுத்த விஜய் சேதுபதி..! முகம் சிவக்க நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பேச்சு..!
வசூல் மட்டுமல்லாது, விமர்சனங்களிலும் படத்திற்கு நல்ல மதிப்பீடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக குடும்பங்கள் இப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்காக வரிசையில் நின்று வருகிறார்கள் என்பதே ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகி 25-நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு, படக்குழு வெற்றியை கொண்டாடும் விழா ஒன்றைச் சென்னையில் நடத்தியது. விழாவில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், பாண்டிராஜ், சந்தோஷ் நாராயணன், யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்ட மகிழ்ச்சியில் படம் பற்றிய அவர்களின் அனுபவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து விஜய் சேதுபதி, விழாவில் பேசும் போது, " இந்த மாதிரியான கதைகள் இன்று சொல்லப்படுவதே ஒரு சாதனை. யாராவது இந்தப் படம் பார்த்து வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்குக் காரணமாக இருந்தால், நாங்கள் எடுத்த உழைப்பு வெற்றி பெற்றதாக உணர்வேன்" என்றார். மேலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு,
‘தலைவன் தலைவி’ படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. ஓடிடி ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு பெரிதாகவே உள்ளது. திரையரங்குகளுக்கு செல்ல முடியாத குடும்பங்கள், இப்போது வீட்டிலிருந்தே படம் காணும் வாய்ப்பு பெறுவதால், ஓடிடி வெளியீட்டும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தலைவன் தலைவி’ ஒரு கலர்ஃபுல் காதல் கதை அல்ல. இது கடந்து வரக்கூடிய, வாழ்ந்து காணக்கூடிய உண்மையான உறவுகளின் போராட்டம்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் 'தலைவன் தலைவி' படத்தை பார்க்கலாம்..! இந்திய தணிக்கை குழு வழங்கிய புதிய சான்றிதழ்..!