×
 

கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய்..! சிகிச்சை பலனின்றி காலமானார்..!

கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய்.இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

2000களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஃபேமஸாக விளங்கிய இளம் நடிகர்களில் ஒருவராக இருந்த அபிநய், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் நீண்டநாளாக கல்லீரல் தொற்று பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. இப்படி இருக்க அபிநய், 2002-ம் ஆண்டு வெளியான இயக்குநர் அழகப்பன் இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அந்தப் படத்தில் நடிகர் தனுஷ், ஷிரின், அபிநய், ரினா, ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையின் மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய படம் என பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக அபிநய் நடித்த பாத்திரம் அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது இயல்பான நடிப்பு, முகபாவனைகள், மற்றும் திரையில் தோன்றிய நேர்மை, அவரை ரசிகர்களிடையே தனித்துவமாக்கியது. இப்படியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், அபிநய் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அவரது முக்கிய படங்களில் — ஜங்ஷன் (2002), சிங்கார சென்னை (2004), சக்சஸ் (2003) என்றென்றும் புன்னகை (2014) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் சில படங்களில் அவர் கதாநாயகனின் நண்பராகவும், சிலவற்றில் எதிர்மறை பக்கமும் வெளிப்படுத்தினார். நடிப்பு மீது கொண்ட காதலால், பெரிய வாய்ப்புகள் இல்லாதபோதிலும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக அபிநய்க்கு கல்லீரல் தொடர்பான கடுமையான தொற்று பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் சென்னையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என கூறிய நிலையில், அதற்கான செலவாக ரூ.28 லட்சம் தேவைப்பட்டது. அந்த தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் அவருக்காக உதவி திரட்டினர்.

இதையும் படிங்க: அது சரி.. அரசியலில் அப்பா.. சினிமாவில் பிள்ளையா..! விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பெயர் வெளியீடு..!

அதில் KPY பாலா மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் நிதி உதவி செய்தனர். அவரது உடல்நிலை சிறிதளவு முன்னேற்றம் அடைந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அவர் ஓரிரு சினிமா நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் முதல் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும், இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி வெளியானதும், சினிமா வட்டாரத்தில் துயரநிலை நிலவுகிறது. அபிநய்க்கு உறவினர் பெரிதாக யாரும் இல்லை என்று அவரது அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தனியாகவே வாழ்ந்து வந்ததாகவும், சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மரணத்திற்குப் பின்னர், அந்த நண்பர்களே இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர் வசித்திருந்த சென்னைப் பகுதியில், அவரது உடல் தற்போது வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் அபிநயின் மறைவுச் செய்தி வெளியாகியதும், திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். KPY பாலா தனது பதிவில், “அபிநய் அண்ணன், உன் சிரிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். கடைசியாக பேசினபோது நீங்க உற்சாகமாக இருந்தீங்க. நிம்மதியாக உறங்குங்கள்” என்று எழுதியுள்ளார். அதேபோல், சில ‘துள்ளுவதோ இளமை’ குழுவினரும், “அந்தப் படம் மூலம் நாம் அனைவரும் கனவு கண்டோம். இன்று அந்தக் குழுவின் ஒரு அங்கம் இல்லாமல் போய்விட்டது” எனப் பகிர்ந்துள்ளனர். இப்படியாக அபிநய் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் பெரும் சிக்கல்களை சந்தித்தார். திரையுலகத்தில் இடம்பிடிக்க முடியாமல் போராடியும், சினிமா மீதான பற்றை அவர் ஒருபோதும் இழக்கவில்லை.

அவரது இறுதி சடங்கு குறித்து தற்போது அவரது நண்பர்கள் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சங்கம் (FEFSI) ஆகியவற்றிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத் துறையினர் அவரின் இறுதி மரியாதையைச் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆகவே அபிநய் - ஒரு சிறிய காலத்துக்குள் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். அவரது நடிப்பு, இயல்பான வெளிப்பாடு, மற்றும் புன்னகை இன்னும் பலரின் நினைவில் நிலைத்து நிற்கும்.

அவர் ஒரு பிரபல நடிகராக மாற முடியாமல் போனாலும், சினிமாவுக்காக வாழ்ந்தவர் என்ற அடையாளம் என்றும் அவருடன் இருக்கும். எனவே “துள்ளுவதோ இளமை” படத்தின் இளம் முகங்களில் ஒருவராக தொடங்கிய வாழ்க்கை, இப்போது அமைதியான நிறைவை அடைந்துள்ளது. அபிநயின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் கிட்ட வந்த ஜாலியா இருக்கா.. ஆண்ட்ரியா ராக்.. கவின் ஷாக்..! ஹைப்பை கிளப்பும் மாஸ்க் படத்தின் டிரைலர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share