எம்.ஜி.ஆரை கண்முன் கொண்டுவந்த கார்த்தி..! மிரட்டும் 'வா வாத்தியார்' பட திரை விமர்சனம்..!
நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் மிரட்டும் திரை விமர்சனம் இதோ.
தமிழ் சினிமாவில் டார்க் காமெடி என்ற ஜானரை தனக்கென ஒரு அடையாளத்துடன் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய இயக்குநர் நலன் குமரசாமி. ‘சூது கவ்வும்’ போன்ற படங்கள் மூலம், நகைச்சுவை என்றால் வெறும் சிரிப்பு மட்டுமல்ல, அதில் இருண்ட அரசியல், சமூக விமர்சனம், அப்சர்ட் தன்மை ஆகியவற்றையும் கலக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அவர். அந்த வகையில், கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? நலன் மீண்டும் தனது மேஜிக்கை காட்டியுள்ளாரா? என்பதற்கான பதில்களை இந்த படம் தருகிறதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.
‘வா வாத்தியார்’ படத்தின் கதை, தமிழ்சினிமாவின் பொற்கால நாயகன் எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு நகர்கிறது. ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக படத்தில் வருகிறார். அவரது வாழ்க்கை முழுவதும் எம்.ஜி.ஆரின் சினிமாவும் கொள்கைகளுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஒரு எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் போது, “எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்” என்ற செய்தி திரையரங்கில் ஒலிக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில், ராஜ்கிரண் அழுதபடியே வெளியே வர, அதே நொடியில்தான் அவருக்கு பேரன் பிறக்கிறான். எம்.ஜி.ஆர் இறந்த அந்தக் கணத்திலேயே பேரன் பிறந்ததால், “எம்.ஜி.ஆர் மீண்டும் வந்திருக்கிறார்” என்ற நம்பிக்கையுடன், அந்த குழந்தையை அடுத்த எம்.ஜி.ஆராக நேர்மையாக, ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
அந்த பேரனாக கார்த்தி. சிறுவயதில் எம்.ஜி.ஆர் போலவே வளர்க்கப்படும் கார்த்தி, ஒரு கட்டத்தில் நம்பியார் ஸ்டைலை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு, சற்று வளைந்து நெளிந்து, தவறான வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கும் பாதைக்கு செல்கிறார். அந்த கலாட்டா வாழ்க்கையின் தொடர்ச்சியாக, விதியின் விளையாட்டால் அவர் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். இதற்கிடையில், ‘மஞ்சள் முகம்’ என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக உருவாக, அந்த கும்பலை பிடிக்கும் பொறுப்பு கார்த்திக்கு வழங்கப்படுகிறது. ஒருபுறம் போலீஸ் அதிகாரியாக அவர் செய்யும் நடவடிக்கைகள், மறுபுறம் அவர் வாழும் இரட்டை வாழ்க்கை, இதற்கிடையே கார்த்தியின் உண்மை முகம் அவரது தாத்தா ராஜ்கிரணுக்கு தெரிய வர, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் ‘வா வாத்தியார்’ படத்தின் மையக் கதை.
இதையும் படிங்க: உன்னை யார் திருமணம் செய்வார்கள் என சொன்னாங்க..! மனதின் வலியை வெளிப்படையாக பேசிய மீனாட்சி சவுத்ரி..!
கார்த்தி என்ற நடிகரை எடுத்துக் கொண்டால், எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை பொருத்திக் கொள்வதே அவரது மிகப்பெரிய பலம். குறிப்பாக, கொஞ்சம் நெகட்டிவ் ஷேட்ஸ் கலந்த கதாபாத்திரங்கள் என்றால், அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று கலக்குவார். ‘வா வாத்தியார்’ படத்தில், நம்பியார் இன்ஸ்பிரேஷனுடன் அவர் செய்யும் தவறான வேலைகள், அதில் வரும் நகைச்சுவை, உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தும் ரசிக்க வைக்கிறது. அதே நேரத்தில், எம்.ஜி.ஆராக மாறும் போது, அவர் காட்டும் மேனரிசம், நடை, பார்வை, வசன பாணி எல்லாம் ஒரு ரசிகரின் மரியாதையோடு செய்யப்பட்ட ஹோமஜ் ஆகவே தெரிகிறது. குறிப்பாக, “சண்டையில்கூட பெண்களை அடிக்க மாட்டேன்” என்று அவர் காட்டும் ரியாக்ஷன் போன்ற காட்சிகள், கார்த்தியின் சிக்ஸர் பெர்ஃபார்மன்ஸாக அமைந்துள்ளன.
படத்தின் முதல் பாதி முழுக்க, கார்த்தி தன் தாத்தாவிற்கு தெரியாமல் கோல்மால் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பது, அதைச் சுற்றியுள்ள காமெடி சீக்வென்ஸ்கள் என வேகமாக நகர்கிறது. அந்த உண்மை தெரிய வரும் தருணத்தில் ராஜ்கிரண் இறப்பதும், அதன் பின் “எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்” என்ற கான்செப்டை நலன் கையாளும் விதம், படத்திற்கு ஒரு அப்சர்ட் ஆனால் சுவாரஸ்யமான ட்விஸ்டை கொடுக்கிறது. ராஜ்கிரண் இந்த படத்தில் குறைந்த நேரமே வந்தாலும், அவரது இருப்பே கதைக்கு எடை சேர்க்கிறது.
கார்த்தியைத் தவிர, படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்கான பங்கினை சிறப்பாக செய்துள்ளனர். கீர்த்தி ஷெட்டி கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லையென்றாலும், “எம்.ஜி.ஆர் யார்?” என்பதை கார்த்தி உணரச் செய்யும் ஒரு முக்கிய புள்ளியாக அவர் பயன்படுத்தப்பட்ட விதம் சரியாக வேலை செய்கிறது. துணை நடிகர்கள் அனைவரும் நலன் குமரசாமியின் காமெடி உலகத்திற்கு இயல்பாக பொருந்தியுள்ளனர்.
நலன் குமரசாமி படம் என்றாலே, ஒன்-லைனர் காமெடிகள் சரவெடியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், ‘வா வாத்தியார்’ படத்தில் அவர் சீன்ஸாக, சிச்சுவேஷன் காமெடியாக விஷயங்களை அமைத்துள்ளார். குறிப்பாக, இரவில் எம்.ஜி.ஆர் வந்து கார்த்தியின் தவறுகளை தட்டி கேட்கும் காட்சிகள் செம கலகலப்பு. அதேபோல், காலை மஞ்சள் முக குரூப்பை பிடிக்க தேடும் கார்த்தி, இரவில் அதே குரூப்பை காப்பாற்றும் கலாட்டா, டார்க் காமெடியின் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
இரண்டாம் பாதியில், சில காட்சிகள் சற்று ரிப்பீட் ஆகிறது போலவும், “இது தான் நடக்கப் போகிறது” என்று பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதாகவும் தோன்றுகிறது. இதனால், சஸ்பென்ஸ் கொஞ்சம் குறைகிறது. இருப்பினும், நலனின் திரைக்கதை வேகம் மற்றும் காமெடி டோன் காரணமாக, படம் எங்கும் போர் அடிக்கவில்லை.
டெக்னிக்கல் ரீதியாகப் பார்த்தால், படம் மிக வலுவானது. கேமரா வேலை, கலை இயக்கம் அனைத்தும் கதையின் டோனுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இந்த படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் சிக்ஸர் அடித்துள்ளார். 60-களின் இசை நறுமணத்தை, இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையாக மாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ், ஹோமஜ் ட்ராக்ஸ் ஆகியவை ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கின்றன.
மொத்தத்தில், ‘வா வாத்தியார்’ படத்தின் பிளஸ் பாயின்ட்ஸாக கதைக்களம், கார்த்தியின் அசத்தலான நடிப்பு, நலன் குமரசாமியின் டார்க் காமெடி உலகம் மற்றும் டெக்னிக்கல் ஒர்க் ஆகியவை விளங்குகின்றன. மைனஸாக சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவதும், பழைய கான்செப்டை புதிய கோணத்தில் சொல்ல முயன்றபோதும் முழுமையான ஆச்சரியம் தராததும் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், ‘வா வாத்தியார்’ என்பது ஒரு கம்ப்ளீட் நலன் ஸ்டைல் எண்டர்டெய்னர். எம்.ஜி.ஆர் ஹோமஜ், டார்க் காமெடி, கார்த்தியின் கலக்கல் நடிப்பு என ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் இது. மொத்தத்தில், “வா வாத்தியார்… அட வாத்தியார் வந்தாலே வெற்றி தானே!” என்று சொல்ல வைக்கும் ஒரு அனுபவமாக இந்த படம் இருக்கிறது.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் கையை மீறி போன பொங்கல்..! ஜனநாயகன் படத்தை தொடர்ந்து தெறி பட ரீ-ரிலீஸும் ஒத்திவைப்பு..!