“வேட்டுவம்” படப்பிடிப்பில் உயிரிழந்த மோகன்ராஜ் குறித்த சர்ச்சை..! ஸ்டண்ட் யூனியன் தலைவர் பரபரப்பு விளக்கம்..!
“வேட்டுவம்” படப்பிடிப்பில் உயிரிழந்த மோகன்ராஜ்க்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக ஸ்டண்ட் யூனியன் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலகத்தில் உள்ளவர்களையும் சோகத்திற்குள்ளாகிய நிகழ்வு என்றால் அதுதான் புதிய தமிழ்ப்படமான “வேட்டுவம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது நிகழ்ந்த துயரமான சம்பவம்..இந்த சம்பவம் தான் தற்பொழுது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்பவர், படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றின் போது காரில் ஸ்டண்ட் செய்தபோது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என பல தளங்களில் இதுகுறித்த கேள்விகள் அதிகம் எழுந்த நிலையில், ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதற்கான தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதன்படி, வடபழனியில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில், செய்தியார்களைச் சந்தித்த அவர், "மோகன்ராஜ் அவர்களின் மரணம் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்மையை நாம் விளக்க வேண்டும்.. படப்பிடிப்பு தளத்தில் எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன என்பதையும், அவற்றின் பூரண நிலையைப் பற்றியும் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். அந்தப்பொழுது படம் இயக்கிய குழு அனைத்து சிக்கல்களையும் மனதில் கொண்டு, அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. படப்பிடிப்பு இடத்தில் பாதுகாப்பு கருவிகள், மாதிரி முயற்சிகள் "ரிஹசல்", தொழில்நுட்ப குழுவினரின் ஒத்துழைப்பு ஆகியவை அனைத்தும் இருந்தன” என அவர் கூறினார்.
பின், சமூக ஊடகங்களில் ‘படப்பிடிப்பு தளத்தில் ஆம்புலன்ஸ் இல்லை’ என பரவிய புகார் பற்றி கேள்வி எழுந்தபோது, அதை தகுந்த முறையில் மறுத்த ஸ்டண்ட் யூனியன் தலைவர், "படப்பிடிப்பு தளத்தில் ஆம்புலன்ஸ் இல்லை என்பது ஒரு பொய்யான மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டு. அங்கு மருத்துவக் குழுவும், சிகிச்சைக்கான அனைத்து உடனடி வசதிகளும் இருந்தன. யாரும் இதைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என கேட்டுக்கொண்டார். மேலும், படப்பிடிப்பு தொடர்பாக சண்டை கலைஞர்களுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் பற்றியும், அதன் செயலாக்கம் குறித்தும் குறிப்பிட்ட அவர், " மோகன்ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான இன்சூரன்ஸ் உண்டு. இது அவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையில் செயல்படும். எங்களது யூனியன் இந்த விஷயத்தில் முழு பொறுப்புடன் இருக்கிறது.
இதையும் படிங்க: "இருண்மையின் இளவரசன்".. பிரபல பாடகர் ஓஸி ஆஸ்பர்ன் காலமானார்..!!
மேலும், எங்கள் யூனியன் சார்பாகவும், தயாரிப்பாளர்களின் சார்பாகவும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். இது குறித்து ஏற்கனவே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.. இந்த சம்பவம் ஒரு துயரமான விபத்து. ஆனால் அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. சண்டை காட்சிகள் மிகவும் ஆபத்தானவை. ஆனால் அவை செய்யப்படும் பொழுது அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுக்கப்படுகிறது. இது ஒரு வருத்தத்திற்குரிய விபத்து" என கூறினார். இந்த சூழலில், இந்த விவகாரத்தில் திரையுலகத்தின் பல பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன்படி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர், "சண்டை கலைஞர்களின் பாதுகாப்பு என்பது திரைப்பட தொழிலில் மிக முக்கியமானது. இந்த வகையில் எந்த தளவாடங்களும் குறையாமல் இருக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். மறைந்த மோகன்ராஜ் போன்ற சண்டை பயிற்சியாளர்கள், திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் இயங்கும் மறைமுக நாயகர்கள். அவர்களது நலனும், பாதுகாப்பும் காக்கப்பட வேண்டியது திரையுலகத்தின் அவசியமாக இருக்கிறது. இந்த "வேட்டுவம்" திரைப்படத்துக்கு எதிராக எழுந்த புகார்கள் மற்றும் சந்தேகங்களை முழுமையாக மறுத்து, ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் அளித்த விளக்கம், ஒரு முக்கியமான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
மோகன்ராஜ் மறைவுக்கு யாரும் பொறுப்பாக வில்லை என்றாலும், இந்தச் சம்பவம் மூலம் எதிர்காலத்தில் மேலும் சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்புகள் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பது உறுதி.
இதையும் படிங்க: சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசரை காண கட்டணம் வசூலிப்பு..! கொந்தளித்த சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன்..!