சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா...! "கூலி" படத்தை பார்த்து முதல் விமர்சனத்தை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின்..!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது திரையுலக பயணத்தில் மிக முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளார் என்றே சொல்லலாம். அவர் திரைத்துறையில் காலடி பதித்து சுமார் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்தத் தருணத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் நாளை, பான் இந்தியா ரீதியாக வெளியிடப்படுகிறது. இந்த சினிமா நிகழ்வு, தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலும் ஒரு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், தனது இயல்பான நடிப்புத் திறன், வசீகரமான ஸ்டைல், மக்கள் மனங்களில் நிலைத்து நின்ற வசனங்கள் ஆகியவற்றின் மூலம் சூப்பர் ஸ்டார் என்ற பதவியை அடைந்தார். இன்று வரை அவரது நடிப்பில் வெளியான 170 படங்கள் அவரது பிரமாண்டப் பயணத்தின் சான்றுகளாக உள்ளன. நாளை திரைக்கு வரவுள்ள ‘கூலி’ திரைப்படம் அவரது 171-வது படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து இயக்கியுள்ள படம் தான் ‘கூலி’. இவர் உருவாக்கிய ‘லோகேஷ் சினிமா யூனிவர்ஸ்’ எனப்படும் தனி உலகத்தில் ‘கூலி’யும் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இந்தப் படத்தில் சண்டை காட்சிகள், திரைக்கதை அமைப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தும் ரசிகர்களை உச்ச களத்தில் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திரைக்கதையை இயக்குநர் மற்றும் அவரது குழு மிகுந்த உழைப்புடன் அமைத்துள்ளனர். குறிப்பாக ‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தமிழ் திரையுலகின் நாயகன் நடிகர் சத்யராஜ், ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான், ஸ்ருதிஹாசன், பஹத் பாசில், சவுபின் ஷாஹிர், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகியிருக்கின்றது என்பதை இதன் நட்சத்திர பட்டியலே உறுதிபடுத்துகிறது. மேலுமாக இசை அமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர், ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து இசை அமைத்துள்ளார். அவரின் இசைகள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். ‘கூலி’ படத்திற்கான பாடல்கள், குறிப்பாக ‘கூலி கிங்’ மற்றும் ‘போர் வாசல்’ போன்ற பாடல்கள், வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்தன. அனிருத் அமைத்துள்ள பின்னணி இசையும் படம் முழுவதும் ஒரு உயிர் ஊட்டும் சக்தியாக செயல்படுவதற்கான அறிகுறிகள், ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோ பாடல்களிலேயே தெளிவாகக் காணப்பட்டன.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் குறித்து கம்ளைண்ட் செய்த ரஜினிகாந்த்..! ‘கூலி’ இசைவெளியீட்டு விழாவில் சஸ்பென்ஸ் இருக்காம்..!
இந்த நிலையில் சினிமா துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கும் மாஸ் என்டர்டெய்னராக கூலி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இது ரஜினியின் படத்திற்கு அரசியல் களத்திலிருந்தும் நேரடி ஆதரவு கிடைக்கும் என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க, தமிழக அரசு ‘கூலி’ படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன் கீழ், ரிலீஸ் நாளில் அதிகபட்சமாக ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 2 மணி வரை காட்சிகள் திரையிட முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரிலீஸ் நாளில் திரையரங்குகளில் பெரும் கூட்டம் கூடி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடவுள்ளார்கள். தற்போது முன்பதிவுகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் ப்ரீமியர் காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் கிடைக்காமல் போயுள்ளன. படம் வெளியாவதற்கும் முன்பே உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று காலை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘கூலி’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் அவரது சிக்னேச்சர் ஸ்டைலில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. திரையுலகில் அரிய சாதனையைப் பதிவு செய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழியாக தனது ரசிகர்களுக்கு அருமையான ஒரு வரலாற்று நிகழ்வை அளிக்க இருகிறார். அவரது 171-வது படமான ‘கூலி’ வெற்றியை பார்த்து, அவரது 50 ஆண்டுகள் திரைப்பயணத்தையும் கொண்டாட, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியின் ‘கூலி’ படத்தில் உலக நாயகனா..! அதிரடியான ட்விஸ்ட்களை களமிறக்கும் லோகேஷ் கனகராஜ்..!