மீண்டும் ஷாருக்கானுடன் இணைந்த தீபிகா படுகோன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!!
கல்கி 2-ல் இருந்து வெளியேறிய பின் ஷாருக்கான் படத்தில் இணைந்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பாகம் 2ல் கதாநாயகியாக நீடிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அடுத்த நொடியே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் 'கிங்' என்ற புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தி தீபிகாவின் தொழில்முறை வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை காட்டுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 'கல்கி 2898 AD' தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. "தீபிகா படுகோன் இனி 'கல்கி 2898 AD' பாகம் 2ல் பங்கேற்க மாட்டார். முதல் படத்தின் நீண்ட பயணத்திற்கு பிறகும், கிரியேட்டிவ் ஒத்துழைப்பு இல்லாததால், இந்த முடிவை எடுத்துள்ளோம். இத்தகைய பிரமாண்டமான புராண-அறிவியல் படத்திற்கு முழு அர்ப்பணிப்பு தேவை," என்று அறிக்கையில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது பாய்ந்த FIR.. காரணம் இந்த விளம்பரம் தானாம்..!!
தீபிகா முதல் படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் உடன் நடித்து, ₹1,100 கோடி வசூல் செய்த படத்தில் முக்கிய பாத்திரம் வகித்தார். மேலும் சமீபத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்தும் தீபிகா விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு அடுத்த நாளே, தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிமிக்க பதிவை வெளியிட்டார். போலந்தில் தொடங்கிய 'கிங்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில், ஷாருக்கானின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்தார். "கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ''ஓம் சாந்தி ஓம்'' படப்பிடிப்பின் போது அவர் (ஷாருக்கான்) எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தால் நமக்கு கிடைக்கும் அனுபவமும், அதில் நீங்கள் யாருடன் நடிக்கிறீர்கள் என்பதும் அதன் வெற்றியை விட மிக முக்கியமானது என்பதுதான். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் அதை பயன்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் நாங்கள் மீண்டும் எங்கள் 6வது படத்தை ஒன்றாக உருவாக்குகிறோம்?” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு 'ஓம் ஷாந்தி ஓம்' (2007), 'சென்னை எக்ஸ்பிரஸ்' (2013), 'ஹேப்பி நியூ இயர்' (2014), 'பதான்' (2023), 'ஜவான்' (2023) ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 'கிங்' படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார், இது 'பதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கானுடனான அவரது இரண்டாவது படமாகும். படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முதல் முறையாக தந்தையுடன் நடிக்கிறார்.
அபிஷேக் பச்சன் (வில்லன்), ஜெய்தீப் அஹ்லாவத், அனில் கபூர், அபய் வர்மா, ராணி முகர்ஜி, ஜாக்கி ஷிராஃப், அர்ஷத் வர்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். உயர் ஆக்ஷன் காட்சிகளும், குடும்ப உணர்வு நிறைந்த கதையும் கொண்ட இந்தப் படம் 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங், "பெஸ்டெஸ்ட் பெஸ்டீஸ்!" என்று கமெண்ட் செய்து, இந்த ஜோடியின் நட்பை வெளிப்படுத்தினார். தீபிகாவின் இந்த முடிவு, தென்னிந்திய படங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, போலிவுட்டில் தனது நிலைத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 'கிங்' படம் தீபிகாவின் திரும்பி வரும் பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: என்னது..!! 'கல்கி 2898 AD'-2ல் தீபிகா இல்லையா..!! ஷாக்கில் ரசிகர்கள்..!!