மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!
நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு எதிரான அவதூறு பதிவுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன் தூகுதீபா, 33 வயதுடைய தனது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024 ஜூன் 8 அன்று, ரேணுகாசாமி, சித்ரதுர்காவைச் சேர்ந்த மருந்தக ஊழியர், தர்ஷனின் நெருங்கிய தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச செய்திகள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தர்ஷன், தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் ரேணுகாசாமியை பெங்களூருக்கு அழைத்து வந்து, ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு நிறுத்துமிடத்தில் வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஜூன் 9 அன்று, சுமனஹள்ளி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அருகே ரேணுகாசாமியின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு காவல்துறை 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, தர்ஷனின் குற்றத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை சமர்ப்பித்தது. 2024 அக்டோபர் 30 அன்று மருத்துவ காரணங்களுக்காக தர்ஷனுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டு, டிசம்பர் 13 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு மற்றும் பவித்ராவுக்கு நிரந்தர பிணை வழங்கியது. ஆனால், 2025 ஜனவரியில், கர்நாடக அரசு இந்த பிணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 17ம் தேதி அன்று பிணை மீதான முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கோரி பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காற்றில் கலந்த 'கன்னடத்து பைங்கிளி'.. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..!
இந்நிலையில் பிரபல கன்னட மற்றும் தமிழ் நடிகையான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) மீது சமூக வலைதளங்களில் பரவிய அவதூறு பதிவுகள் தொடர்பாக கர்நாடக மாநில மகளிர் ஆணையம் காவல்துறையை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் எனக் கூறப்படும் சிலர், திவ்யா ஸ்பந்தனாவுக்கு ஆபாச மற்றும் அவதூறு மெசேஜ்களை அனுப்பியதாகவும், இது பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் எனவும் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
திவ்யா ஸ்பந்தனா, தர்ஷன் தொடர்புடைய ஒரு வழக்கு குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக ஆபாச பதிவுகள் பரவியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் செயல் அத்துமீறியதால் கோபமடைந்த நடிகை ரம்யா, "ரேணுகாசாமி அனுப்பிய செய்திக்கும், தர்ஷனின் ரசிகர்கள் எனக்கு அனுப்பிய செய்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதுபோன்றவர்கள் தான் பெண்களை பலாத்காரம் மற்றும் கொலை செய்கிறார்கள்" என்று கூறியதோடு, தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய 11 பேரின் பெயர்களையும் வெளியிட்டார். இதனால் நடிகர் தர்ஷன் ரசிகர்கள், நடிகை ரம்யா இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் பெங்களூரு காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
திவ்யா ஸ்பந்தனா, தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், 2013-ல் காங்கிரஸ் கட்சி சார்பாக மாண்டியா தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில், அவரது திருமணம் மற்றும் மறைவு குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்த அவதூறு பதிவுகள் பெண்களுக்கு எதிரான இணையத் துன்புறுத்தலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, இணையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உறுதியான சட்ட அமலாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: மை வைத்த கண்ணழகி சரோஜா தேவியின் கண்கள் தானம்.. இருவர் வாழ்வில் வீசப்போகும் ஒளி..!