×
 

பாக்யராஜின் இறுதி நிமிடங்கள்!! 72 குண்டுகள் முழங்க உடல் தகனம்! திரை கதை வித்தகருக்கு பிரியாவிடை!

பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளரான பாக்யராஜ் மறைவு, திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாக குடும்ப கதைகளை வித்தியாசமான திரைக்கதைகளாக மாற்றி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த அவர், மாரடைப்பால் காலமானது திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

நேற்று அதிகாலை வழக்கம்போல் நடைபயிற்சியை முடித்து வீட்டிற்கு திரும்பிய பாக்யராஜ், அப்போது வந்த செல்போன் அழைப்பில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

இதையடுத்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜின் மறைவால் சோகமடைந்த ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: பெசன்ட் நகர் மின் மயானத்தில் இயக்குநர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு! படப்பிடிப்புகள் ரத்து!! தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பொதுமக்கள் அஞ்சலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் பாக்யராஜின் உடலை தோளில் சுமந்து சென்றனர். இறுதி ஊர்வல வாகனத்தில் அவரது மனைவி பூர்ணிமா மற்றும் மகன் சாந்தனு உடன் சென்றனர். நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானம் வரை சென்ற ஊர்வலத்தின் வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, பாக்யராஜுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அமைச்சர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையுடன் துப்பாக்கி முழக்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.

அவரது சமுதாய மரபுப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. உணர்ச்சிவசப்பட்ட மனைவி பூர்ணிமா, பாக்யராஜின் உடலுக்கு முத்தமிட்டு இறுதி விடை கொடுத்தார். மகன் சாந்தனு இறுதிச்சடங்குகளை செய்து முடித்ததைத் தொடர்ந்து, பெசண்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. திரைக்கதை உலகில் அழியாத தடம் பதித்த பாக்யராஜுக்கு, திரையுலகமும் ரசிகர்களும் கண்ணீருடன் இறுதி பிரியாவிடை அளித்தனர்.

இதையும் படிங்க: காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share