S.N சக்திவேல் ஒரு நல்ல மனிதர், என் வளர்ச்சிக்கு அவர் தான் காரணம்.. நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உருக்கம்..!!
மறைந்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குனருக்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.என். சக்திவேல் (ஆகஸ்ட் 30) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. இவரது மறைவு தமிழ் தொலைக்காட்சித் துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர், சன் தொலைக்காட்சியில் 2000 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி, ஐந்து பகுதிகளாக 453 அத்தியாயங்களுடன் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
இந்தத் தொடரை எஸ்.என். சக்திவேல் மற்றும் சுகி மூர்த்தி ஆகியோர் இயக்கினர். ராடன் மீடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த நகைச்சுவைத் தொடர், மாமியார்-மருமகள் உறவை மையமாகக் கொண்டு, 1994 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஹிந்தி தொடரான ‘து து மெயின் மெயின்’ தொடரைத் தழுவி உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என் சக்திவேல் காலமானார்..!!
ஸ்ரீபிரியா, நளினி, நிரோஷா, தேவதர்ஷினி, வி.ஜே சித்ரா, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்து புகழ் பெற்றனர். எஸ்.என். சக்திவேல், தன் இயக்கத்தின் மூலம் இந்தத் தொடரை எளிமையான நகைச்சுவையுடன் பார்வையாளர்களை கவர்ந்தவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த காட்சிகள், குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
எஸ்.என் சக்திவேல், தனது திரைப்பயணத்தை சின்னத்திரைக்கு முன்னதாக திரைப்படங்களில் தொடங்கினார். அவர் இயக்கிய 'தண்ணீரில் கண்டம்' திரைப்படம், ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இருப்பினும், இவரது முழுத் திறமையையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தியது சின்னத்திரைதான்.
https://x.com/i/status/1961673822106783871
இவரது மறைவு குறித்து சக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் 'பட்டாபி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், ஒரு வீடியோவை வெளியிட்டு தனது வருத்தத்தைப் வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.என் சக்திவேல் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நண்பன் மற்றும் நலம் விரும்பி. அவர் இயக்கிய 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில், 'பட்டாபி' என்ற கதாபாத்திரம் மூலமாகத்தான் தமிழக மக்களிடையே எனக்குப் பெரிய பெயர் கிடைத்தது. இன்று இந்தளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றால், அதற்கு சக்திவேல் அண்ணா ஒரு முக்கியக் காரணம் என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
எஸ்.என் சக்திவேல் ஒரு நல்ல மனிதர். அவர் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்தப் போராட்டத்தோடே இன்று அதிகாலை 2 மணிக்கு இறைவனிடம் சென்றுவிட்டார் என்று எம்.எஸ். பாஸ்கர் கண்ணீர் மல்க கூறினார். அவரது இந்த உருக்கமான வார்த்தைகள், சக்திவேலின் வாழ்க்கையில் இருந்த கடினமான தருணங்களை எடுத்துரைப்பதாக இருந்தது.
இதையும் படிங்க: ரவி மோகனுக்கு டைம் சரியில்ல போல.. வாங்கிய கடனுக்கு EMI கட்டல.. ECR சொகுசு பங்களாவிற்கு டார்கெட்..!!