மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026!! மகுடம் சூடினார் கேரள சட்டக் கல்லூரி மாணவி! தமிழ்நாட்டுக்கு பெருமை!
இந்த வெற்றியின் மூலம், வரவிருக்கும் சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் கஸியா லிஸ் பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்ட மாணவி கஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்று கவனம் ஈர்த்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 போட்டியில் நாடு முழுவதும் இருந்து 52 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய கேரளாவைச் சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ, போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த கஸியா லிஸ் மெஜோவுக்கு 19 வயது. தற்போது சட்டம் பயின்று வரும் இவர், சிறு வயது முதலே அழகிப் போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இது என்ன புது டிவிஸ்ட்-ஆ இருக்கே..!! திருமண விழாவில் ரவிமோகன் கொடுத்த அரசியல் என்ட்ரி அப்டேட்.. ஷாக்கில் ரசிகர்கள்..!
இதற்கு முன்பு நடைபெற்ற மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 போட்டியிலும் கஸியா லிஸ் இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தார். அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவர், தற்போது மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்று தனது அடுத்த பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கஸியா லிஸ் தனது பள்ளிப்படிப்பின் ஒரு பகுதியை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் முடித்துள்ளார். எமிரேட்ஸ் நேஷனல் பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் அபுதாபி இந்தியன் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அவர் படித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், வரவிருக்கும் சர்வதேச அழகிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் கஸியா லிஸ் பெற்றுள்ளார். போர்ட்டா ரிக்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 75-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவர் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் பட்டத்தை வென்றுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ சதாவ்லேகர் இரண்டாம் ரன்னர்-அப் பட்டத்தை பெற்றுள்ளார்.
19 வயதில் தேசிய அளவிலான அழகிப் பட்டத்தை வென்ற கஸியா லிஸ் மெஜோவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சர்வதேச மேடையில் இந்தியாவுக்காக அவர் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விஷாலின் ‘மகுடம்’ படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா..!! 2 வாரங்களிலேயே ரசிகர்கள் ஒதுக்கிவிட்டதாக தகவல்.. வசூலில் செம சரிவு..!