தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும் என விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் மணி நேரங்களில் இருந்தே எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
முதல் சில சுற்றுகளில் அதிமுகவும் திமுகவும் இரண்டாவது இடத்திற்கு மாறி மாறி போட்டியிட்ட நிலையில், தற்போது திமுக இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. மூன்று முக்கிய கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், தவெகவின் வலுவான முன்னிலை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துகள்:
சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு முன்னிலை பெற்று வரும் நடிகர் விஜய்க்கு அரசியல், சினிமா, கலை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட சிறப்பு பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் பற்றிய கேள்வி..!! தனது ஸ்டைலில்.. ஒரே வார்த்தையில் மம்மூட்டியின் 'நச்' பதில்..!! ஆடிப்போன ஏர்போர்ட்..!!
ரஹ்மான் தனது பதிவில், “அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடும் உங்கள் பயணம் சிறக்கட்டும். சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தி, விஜயின் அரசியல் பயணத்தின் மீது ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் பண்பாடு, சமூக நீதி மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற விவகாரங்களை மையப்படுத்தி தவெக தேர்தல் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜய், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றிருப்பதாக ஆரம்ப கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடியாத நிலையில், இறுதி முடிவுகள் அடுத்த சில மணி நேரங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கக் கூடிய இந்தத் தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் எதிர்கால அரசியல் சூழலை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: அடுத்த சிக்கல்..!! வருமான வரி தொடர்பான வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டுக்கு போன விஜய்..!!