×
 

எளிமையான வரிகள்.. ஆழமான கருத்துக்கள்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்..!!

ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களை எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன் வயதுமூப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பூவை செங்குட்டுவன் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான முத்திரை பதித்தவர். இயற்பெயர் முருகவேல் என்ற இவர், தனது பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களால் புகழ்பெற்றவர். 1967ஆம் ஆண்டு முதல் இவர் ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களையும், 4000-க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பக்தி, காதல், சமூக விழிப்புணர்வு என பல தளங்களில் பரவியுள்ளன.

பூவை செங்குட்டுவன், ‘தேரழந்தூர் சகோதரிகள்’ என்று அறியப்பட்டு, பின்னர் சூலமங்கலம் சகோதரிகள் எனப் புகழ் பெற்றவர்களுக்காக ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் ஆன்மிக உணர்வையும், தமிழின் இனிமையையும் இணைத்து, மக்களை மயக்கியவை. இவர் இரண்டு திரைப்படங்களுக்கு கதை எழுதியதோடு, மூன்று படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். 

இதையும் படிங்க: 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என் சக்திவேல் காலமானார்..!!

மேலும், 15-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் செம்மையைப் பறைசாற்றுவனவாக உள்ளன. 

பகுத்தறிவு வாதியாக இளமையில் இருந்தாலும், பக்திப் பாடல்களில் இவரது ஆழமான உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, இறைவன் படைத்த உலகை போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். மேலும் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’, ‘ஆடுகின்றானடி தில்லையிலே’, ‘திருநெல்வேலி சீமையிலே’ உள்ளிட்ட பாடல்கள் இவரது கவித்திறனுக்கு எடுத்துக்காட்டு. 

இவரது வரிகள் எளிமையானவை, ஆனால் ஆழமான கருத்துகளை உள்ளடக்கியவை. 84 வயதில், தனது படைப்பாற்றலால் இளைய தலைமுறையினரையும் ஈர்த்தவர் இவர். தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த பூவை செங்குட்டுவனின் பங்களிப்பு, தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கலை மற்றும் கலாசாரத்திற்கும் பெருமை சேர்க்கிறது. இவரது படைப்புகள் இன்றும் பலருக்கு உத்வேகமாக விளங்குகின்றன.

இந்நிலையில் கவிஞர் பூவை செங்குட்டுவன் தனது 90 வயதில் வயதுமூப்பு காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகில் பேரிழப்பாக அமைந்துள்ளது. சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மறைவு குறித்து தமிழ் திரையுலகமும், இலக்கிய ஆர்வலர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பூவை செங்குட்டுவனின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அவரது படைப்புகள் அவரை என்றும் நினைவு கூரச் செய்யும். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். 

இதையும் படிங்க: சிறந்த ஆசிய நடிகர்.. “செப்டிமஸ்” விருதை வென்றார் டொவினோ தாமஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share