×
 

‘செல்ல மகனே’ என்று அழைக்கும் இன்னொரு தாய்.. சரோஜா தேவி மறைவுக்கு உலக நாயகன் இரங்கல்..!

சரோஜா தேவி அம்மாவை வழியனுப்புகிறேன் என அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி கன்னடத்தில் மகாகவி காளிதாஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற இவர், அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து 1959ல் இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் நடித்தார்.

அடுத்தடுத்து அப்போதைய தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் பிஸியாக நடித்த நடிகையென்றால் அது சரோஜா தேவிதான். பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றியை தான் கொடுத்தன. 

இதையும் படிங்க: உலகை விட்டு பிரிந்த நடிகை பி.சரோஜா தேவி..! இரங்கலை பதிவு செய்து வரும் பிரபலங்கள்..!

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சரோஜா தேவியின் கோபால் வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று என்றே கூறலாம். மேலும் இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். பல அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார். 

தமிழில் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவிக்கு மற்ற மொழிகளிலும் செல்லப்பெயர் உள்ளது. அதாவது தெலுங்கில் சலபாசுந்தரி என்றும், கன்னடத்தில் அபிநய காஞ்சனா மாலா என்றும், ஹிந்தியில் அபிநய பாரதி என்றும் அழைக்கப்படுவாராம் சரோஜா தேவி. 

இந்நிலையில் 87 வயதான சரோஜா தேவி, வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் பெங்களூருவில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரோஜா தேவியின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், ரஜினிகாந்த், வைரமுத்து, சிவகுமார், நடிகை குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன், சரோஜா தேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share