×
 

நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்திற்கு கிடைக்குமா ஜாமீன்...? - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...!

போதை வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

போதைப்பொருள் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது 2 பேருக்கும் ஜாமின் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு கடந்து வந்த பாதை: 

சென்னை திருவல்லிக்கேணி உதவி காவல் ஆணையரின் கீழ் உள்ள போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் துணை ஆய்வாளர் அருள்மணி கடந்த ஜூன் 17ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் பேருந்து நிலையம் அருகே கொக்கைன் வைத்திருந்ததாக பிராடோ என்கிற ஜி. பிரதீப் குமாரைப் பிடித்தனர். அவரிடம் இருந்து ஒரு கிராம் கொக்கைகன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில் நைஜீரியாவிலிருந்து எம். ஜான் என்ற கானா நாட்டவர் மூலம் கடத்தல் பொருளைப் பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து ஜூன் 18ம் தேதி அன்று  கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர்  பேருந்து நிலையத்தில் வைத்து ஜானை மடக்கிப்பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 10 கிராம் கொக்கைனையும் பறிமுதல் செய்தனர். முதற்கட்டமாக இவர்கள் இருவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் வாங்கியது அம்பலமானது. 

இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதோடு, ஜூன் 23  அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் எடுத்திருப்பது உறுதியானது. இதனிடையே ஜூன் 26ம் தேதி அன்று, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

நடிகர்கள் வாதம்: 

நடிகர் ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில்,  கைது செய்யப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதற்கிடையில், போலீசார் தனக்கு உணவு, தண்ணீர், காபி மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியதாகவும் கூறினார். அவற்றை உட்கொண்ட பிறகு, தனக்கு தொடர்ந்து வாந்தி எடுக்கத் தொடங்கியதாகவும், மயக்கம் அடைந்ததாகவும், இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து அவரது தரப்பு வழக்கறிஞர், “மனுதாரரை போலீசார் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சில மருந்துகளை வழங்கி சிறிது நேரம் சிகிச்சை அளித்தனர். எனவே, இந்த வழக்கில் அவரை பொய்யாக சிக்க வைக்க ஏதேனும் ஒரு பொருள் அவருக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது” எனக்குறிப்பிட்டார். 

மேலும், தன்னிடமிருந்து எந்த கடத்தல் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், முழு பிரச்சினையையும் பரபரப்பாக்க மட்டுமே போலீசார் தன்னை வழக்கில் சிக்க வைத்ததாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. நடிகர் கிருஷ்ணாவும் தன்னிடமிருந்து எந்த கடத்தல் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் வாதிட்டார்.

கிடைக்குமா ஜாமீன்? 

இரு நடிகர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் மற்றும் வழக்கறிஞர் எல். இன்பான்ட் தினேஷ் ஆகியோர் முன்வைத்த வாதங்களைக் கேட்ட நீதிபதி எம். நிர்மல் குமார், செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) உத்தரவுகளை வழங்கவுள்ளதாக கூறி நேற்று விசாரணையை ஒத்திவைத்தார். வழக்கறிஞர், தங்கள் வாடிக்கையாளர்கள் நிரபராதிகள் என்றும், போதைப்பொருள் வழக்குக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் இன்றும் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இரண்டு நடிகர்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share