நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள்.. நடிகை ரம்யா பரபரப்பு கருத்து..!!
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகை ரம்யா பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, தனது ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தியில் உள்ளார். 2024 ஜூன் மாதம், தர்ஷனின் தோழி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசக் குறுந்தகவல்கள் அனுப்பியதாகக் கூறப்படும் ரேணுகாசாமி, சித்ரதுர்காவில் இருந்து கடத்தப்பட்டு, பெங்களூருவில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். 3991 பக்க குற்றப்பத்திரிகையில் தர்ஷன் இரண்டாம் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது, தர்ஷன் தரப்பு வழக்கறிஞர், போலீஸார் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி, தர்ஷனை வில்லனாக சித்தரிக்க முயல்வதாக வாதிட்டார். மறுபுறம், சிறையில் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் ஏழு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பார்க்கிங் தகராறு.. காலா பட நடிகையின் உறவினர் கொடூரக் கொலை..!
முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சைக்கு இடைக்கால ஜாமீன் கோரி, 2024 நவம்பரில் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஆறு வார ஜாமீன் வழங்கியது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நேற்று உச்சநீதிமன்றம் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து, உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. “குற்றவாளி எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர் இல்லை” என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா, “நேற்று உச்சநீதிமன்றம் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் மற்றும் பிறரின் ஜாமீனை ரத்து செய்து ஒரு வலுவான செய்தியை கூறியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். பிறருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீதித்துறை மீது நம்பிக்கை வையுங்கள். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். நீதி நிலைநாட்டப்படும். முக்கியமாக உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா கருத்து கூறியதால், அவரை தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்து, மீதமுள்ள பலரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் தலைமைறைவு.. மாடல் அழகி மீரா மிதுன் எங்க சிக்கியிருக்கார் பாருங்க..!!