மக்களே கேட்டுக்கோங்க...“தங்கம் நல்ல முதலீடே இல்லை” - உலக மகா பங்குச்சந்தை முதலீட்டாளர் ஷாக்கிங் தகவல்...!
முதலீடுகள் செய்வதில் உலக மகா கில்லாடி என பெயர் எடுத்த வாரன் பஃபெட் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கவில்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட்.
தங்கத்தை நோக்கி உலக நாடுகளின் அரசுகள் பெரு முதலீட்டாளர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் மட்டும் எதிர்திசையில் ஓடுகிறார். ஏன் எதற்கு என்று பார்க்கலாம். தங்கத்தில் முதலீடு செய்ய சாமானியர்கள் முதல் நாடுகளின் அரசுகள் வரை முனைப்பாக உள்ளனர். உலகளாவிய பொருளாதார புயல்களிலிருந்து தப்ப தங்கமே சிறந்த முதலீடு என்கின்றனர் நிபுணர்கள். இதன் விலை உயர்ந்த போதும் பலரும் தயக்கமின்றி தங்கத்தை வாங்குகின்றனர். ஆனால் இங்குதான் ஒரு ட்விஸ்ட். முதலீடுகள் செய்வதில் உலக மகா கில்லாடி என பெயர் எடுத்த வாரன் பஃபெட் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கவில்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட்.
இப்போது தான் என்றில்லை. எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்வதில்லை உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த வாரன் பஃபெட். இவரது 12 லட்சம் கோடி சொத்தில் தங்கம் ஒரு குண்டுமணி கூட இல்லை. தங்கம் நல்ல முதலீடு அல்ல என்பதுதான் பஃபெட்டின் திடமான கருத்து. தங்கத்தினால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது என்கிறார். உலகில் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் தங்கத்தை உருக்கி கட்டி ஆக்கினாலும், 63 கன சதுர அடி அளவுள்ள பொருளாக மட்டுமே இருக்கும் என்றும் அதை பார்த்து வியக்க மட்டுமே என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
பிற்காலத்தில் விலை உயரும் என்ற ஒரு யூகத்தில் மட்டுமே தங்கத்தை வாங்குகிறார்கள் என்றும் இது தவறு என்றும் பஃபெட் கூறியுள்ளார். தங்கத்தை இந்த அளவுக்கு கொண்டாட அதற்கு உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு தொழிலை போல் வணிகத்தை போல் சமூகத்திற்கு தங்கம் பலன் தருவதில்லை. இதையெல்லாம் சொன்னது பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆனால் 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் தடதடவென்று உயர்ந்து 64 விழுக்காடு லாபத்தை அழித்திருக்கிறது.
லாபத்தை அள்ளித் தருவதில் வேறு பல நிதி முதலீடுகளை தங்கம் புறமுதுகிட செய்துவிட்டது. இந்த சூழலிலும் தன் கருத்து சரியே என்பதில் உறுதியாக உள்ளார் பஃபெட். எல்லாரும் தங்கத்தை துரத்துவது பெரும் அபாயத்தில் முடியும் என்று கூறுகிறார் பஃபெட். தங்கம் தலை நிமிரச் செய்யுமா அல்லது தலைக்குப்பற விழச் செய்யுமா? காலத்தின் கைகளில் தான் பதில் உள்ளது.
இதையும் படிங்க: இறங்குமுகத்தில் தங்கம் விலை..!! அப்பாடா..!! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..!!
இதையும் படிங்க: காலை ஏறுமுகம்.. மாலை இறங்குமுகம்..!! சற்று நிம்மதி கொடுத்த தங்கம் விலை..!!