மயோனைஸ் LOVERS-களுக்கு ஷாக்..!! மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பாம்..!! தமிழக அரசு அதிரடி..!!
ஷவர்மா போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் மயோனைஸால் உணவு நச்சுத்தன்மை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சுவையான துணை உணவுப் பொருள் தான் மயோனைஸ். முட்டையின் வெள்ளைக் கரு, தாவர எண்ணெய் (வெஜிடபிள் ஆயில்) மற்றும் வினிகர் ஆகியவற்றை இணைத்து தயாரிக்கப்படும் இந்த கிரீம் போன்ற பொருள், சான்ட்விச், பர்கர், ஷவர்மா, வறுத்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு ஃபாஸ்ட் ஃபுட் பொருட்களுக்கு சிறப்பான சுவையை அளிக்கிறது.
குழந்தைகள் பள்ளி டிஃபன் பாக்ஸில் சேர்க்கும் சாண்ட்விச்சுகள் முதல், இளைஞர்கள் விரும்பும் ஷவர்மா வரை, மயோனைஸ் இல்லாமல் அந்த உணவுகள் முழுமையடையாது என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால், இந்த மயோனைஸ் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, பச்சை முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸில், சரியான சேமிப்பு மற்றும் தயாரிப்பு முறை இல்லாதபோது Salmonella typhimurium, Salmonella enteritidis, Escherichia coli (E.coli), Listeria monocytogenes போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருகும் வாய்ப்பு அதிகம் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்..!! மக்களே.. ஜாக்கிரதையா இருங்க..!! சுகாதாரத்துறை அட்வைஸ்..!!
இந்த பாக்டீரியாக்கள் உணவு விஷம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கோடைக்கால வெப்பத்தில் இந்த அபாயம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் இத்தகைய பச்சை முட்டை அடிப்படையிலான மயோனைஸ் உற்பத்தி, பதப்படுத்தல், பேக்கேஜிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகிய அனைத்தையும் ஒரு ஆண்டுக்கு தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தடை Food Safety and Standards Act, 2006 பிரிவு 30(2)(a) அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. தெலங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட உணவு நச்சு சம்பவங்களும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தன. இந்த தடை காலம் ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதை மேலும் ஒரு ஆண்டுக்கு – அதாவது 2027 ஏப்ரல் வரை – நீட்டித்து புதிய அரசிதழ் உத்தரவு வெளியிட்டுள்ளது.
இதனால், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை விரும்பி உண்ணும் மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். பல உணவக உரிமையாளர்களும் மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர். இருப்பினும், பேஸ்டுரைஸ்ட் (வெப்பப்படுத்தப்பட்ட) முட்டை அல்லது முற்றிலும் சைவ முறையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் மீது இந்த தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் சுகாதாரத்தை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மாற்று சுவையான, பாதுகாப்பான உணவுப் பொருட்களைத் தேர்வு செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த தடை நீட்டிப்பு, உணவு தயாரிப்பில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் மட்டும் உணவு அருந்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.