ஒரே நேரத்தில் 12 சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம்..!! திருநாங்கூர் மதங்கீசுவரர் கோயிலில் கோலாகலம்..!!
சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவன் கோவில்களின் சுவாமிகளுக்கு ஒரே நேரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூரில் அமைந்துள்ள புனித மதங்காஸ்ரமத்தில் மதங்க ரிஷி தவம் இயற்றியபோது, பார்வதிதேவி பெண்ணுருவில் அவதரித்து சிவபெருமானைத் திருமணம் செய்துகொண்டு, ரிஷிக்கு திருமணக் கோலத்தில் தரிசனம் அளித்த ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் 12 சிவாலயங்களின் திருக்கல்யாண உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் இந்த சிறப்பு விழாவில், திருநாங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 12 பழமை வாய்ந்த சிவன் கோயில்களின் உற்சவமூர்த்திகள் அம்பாள் சமேதராக எழுந்தருளி, ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வருவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவத்திற்காக பின்வரும் 12 கோயில்களின் சுவாமி-அம்பாள்கள் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்கீசுவரர் கோயிலுக்கு எழுந்தருளினர்:
திருநாங்கூர் ஸ்ரீ அஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீ மதங்கீஸ்வரர், திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரர், திருயோகீசுவரம் ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஸ்ரீ யோகநாதர், திருசொர்ணபுரம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர், திருநாங்கூர் ஸ்ரீ சந்திராசு அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தபுரீஸ்வரர், செம்பதனிருப்பு ஸ்ரீ நற்றுணைநாயகி சமேத ஸ்ரீ நாகநாதர், திருநாங்கூர் ஸ்ரீ நம்பிரியான் சமேத ஸ்ரீ நம்புவார்கன்யர், திருநாங்கூர் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ கைலாசநாதர், திருமேனிக்கூடம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர், பெருந்தோட்டம் ஸ்ரீ அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஸ்ரீ ஐராவதேசுவரர், அன்னப்பன்பேட்டை ஸ்ரீ சுந்தரநாயகி சமேத ஸ்ரீ கலக்காமேசுவரர், நயினிபுரம் ஸ்ரீ நளினாம்பிகை சமேத ஸ்ரீ நயனவரதேசுவரர்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (16-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் வெற்றியைத் தரும்..!!
கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர், அனைத்து உற்சவமூர்த்திகளும் ரிஷப வாகனங்களில் அமர்ந்து எழுந்தருளினர். பின்னர் சீர் வரிசை ஊர்வலத்துடன் திருமண சடங்குகள் முறைப்படி நடைபெற்றன. 12 ஜோடி சிவ-சக்தி உற்சவமூர்த்திகளும் ஒரே நேரத்தில் திருக்கல்யாண வைபவத்தை முடித்துக்கொண்டு, மதங்க ரிஷிக்கு திருமணக் கோலத்தில் பேரழகுடன் காட்சி அளித்தனர். இதனைத் தொடர்ந்து வேதபாராயணம், திருமுறைப் பாராயணம், கைலாய வாத்தியங்கள் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்கும் மங்களகரமான சூழலில் 12 சிவபெருமான்களும் அம்பாள்களுடன் பிரம்மாண்டமான திருவீதியுலா நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலர்கள் முருகன், கணேஷ், ஆய்வாளர்கள் பத்ரிநாதன், முருகன், மாமல்லன் உள்ளிட்டோர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து புனித நாளை கொண்டாடினர். இந்த திருவிழா திருநாங்கூர் பகுதியின் பாரம்பரியத்தையும், சிவபக்தியையும் பறைசாற்றும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.