×
 

ஆடி கிருத்திகை: வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா"..!! வள்ளிமலை கோவிலில் காவடி சுமந்த பக்தர்கள்..!!

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் திருவலம் அருகே அமைந்துள்ள பழமையான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முருகப்பெருமானின் பிறப்பு நட்சத்திரமான கிருத்திகையை முன்னிட்டு நடைபெறும் இவ்விழா, ஆடி மாதத்தில் சிறப்பு முக்கியத்துவம் பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தி அலை அடித்தது. தேரடி அருகே உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் சன்னதியில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்தனக் காப்புடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர்களான வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, அழகிய அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மலை அடிவாரத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கீழ்க்கோவிலில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சந்தனக் காப்பு மற்றும் மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: தமிழ் கடவுள் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை விரதம்.. என்னென்ன பலன்கள் தெரியுமா..??

பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் புனித நீராடிய பின், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளைச் சுமந்து “அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் மலை உச்சிக்கு ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். 

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுடன் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து விழாவைப் பக்தி பரவசத்துடன் கொண்டாடினர். ஆடி கிருத்திகை நாளில் முருகனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தது.
 

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (06-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் ஆதரவு வலுவாக இருக்கும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share