×
 

பக்தர்களே ரெடியா..!! வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் அனுமதி..!! ஆனா இத நோட் பண்ணிக்கோங்க..!!

வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அருகே உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நாளை முதல் (பிப்.1) இந்த அனுமதி அமலுக்கு வருகிறது. இதையடுத்து, வெளியூர்களிலிருந்து பக்தர்கள் திரளாக வரத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை, ‘தென் கைலாயம்’ என்று போற்றப்படும் புனிதத் தலமாகும். அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் வழியாக நடந்து செல்ல வேண்டிய இந்தப் பயணம், குளிர்காலத்தில் கடுமையான காலநிலை காரணமாக தடை செய்யப்பட்டிருந்தது. பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: கந்தனுக்கு அரோகரா..!! நாளை தைப்பூசம்..!! திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!

ஆனால், இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவால் இப்போதே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வனத்துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் இது குறித்து கூறுகையில், “மலை ஏறும் பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குறிப்பாக இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

பக்தர்களின் வசதிக்காக மலையடிவாரத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு உடல் தகுதியுடன் இருப்பவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர்,” என்றார். மேலும், 3-வது, 6-வது மற்றும் 7-வது மலைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மலையடிவாரத்தில் தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் இருப்பர். மலைப்பகுதியில் 8 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழு தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பிஸ்கெட், சிற்றுண்டி போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களுடன் கொண்டு வருபவர்களிடமிருந்து அவற்றை பிரித்தெடுத்து, காகிதத்தில் வைத்து மட்டுமே அனுமதிக்கப்படும். 

கடந்த ஆண்டு மலையேறிய 9 பக்தர்கள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜெயராஜ் தெரிவித்தார். பக்தர்கள் தங்கள் உடல் நிலையை மதிப்பீடு செய்து, வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக மலையேறி திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஏற்பாடுகள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை..!! திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! 3 கி.மீ வரை வரிசை, குளிரால் அவதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share