களைகட்டும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!
மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகமும் புஷ்ப அலங்காரமும் நடைபெறும்.
உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடப்படும் தசரா திருவிழா வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த திருவிழா தென் தமிழக மக்களின் ஆன்மீக உற்சாகத்தையும் பக்தி வெறியையும் ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது.
முன்னதாக 10ஆம் தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 4 மணிக்கு மகுட இசை, 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனையுடன் புஷ்பாஞ்சலி, 5.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு வில்லிசை ஆகியவை இடம்பெறும்.11ஆம் தேதி அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் தொடங்கி காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். அதன்பின் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்படும்.
பக்தர்கள் கோவில் பூசாரியிடம் காப்பு கட்டி, தாங்கள் நேர்த்திக்கடன் பட்ட வேடங்களை அணிந்து காணிக்கை பிரிக்கத் தொடங்குவார்கள். அன்றைய தினம் காலை 7 மணி, பகல் 1 மணி, மாலை 5.30 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் தொடரும்.12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை பல நேரங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (05-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கற்பனை மற்றும் அனுதாபம் உங்கள் பலமாக இருக்கும்..!!
மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் தொடரும். இந்த ஒன்பது நாட்களிலும் அன்னை முத்தாரம்மன் தினசரி இரவு 10 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் திருவீதியுலா வருவாள். சிம்ம வாகனத்தில் துர்க்கை, கற்பக விருட்சத்தில் விசுவகர்மேசுவரர், ரிசபத்தில் பார்வதி, மயிலில் பாலசுப்பிரமணியர், காமதேனுவில் நவநீத கிருஷ்ணர், மீண்டும் சிம்மத்தில் மகிஷாசுரமர்த்தினி, பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர், கமலத்தில் கஜலட்சுமி, அன்ன வாகனத்தில் கலைமகள் ஆகிய திருக்கோலங்களில் அன்னை எழுந்தருளுவாள்.
6ஆம் திருவிழா முதல் 10ஆம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம், கரகாட்டம், டிஸ்கோ நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கும் தசரா பக்தர்கள் நிறைந்திருப்பார்கள். 20ஆம் தேதி காலை பல நேரங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
இரவு 11 மணிக்கு அன்னைக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.21ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரையில் அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு சாந்தாபிஷேகம், 3 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேகம், 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா ஆகியவை நடைபெறும்.
பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்ததும் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.22ஆம் தேதி காலை 6, 8, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகமும் புஷ்ப அலங்காரமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை இணை ஆணையர் ரோஜாலிசுமதா, உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், கோமதி, நிர்வாக அதிகாரி வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த திருவிழா பக்தர்களின் நேர்த்திக்கடன்களையும் குடும்ப நலனையும் நிறைவேற்றும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக அமைகிறது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (03-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம்..!!