கும்பாபிஷேகத்திற்கு ரெடியாகும் மதுரை.. லேசர் விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோபுரங்கள்!!
சுமார் ஆறாயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் வளாகமும் சுற்று வீதிகளும் ஏற்கனவே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
வானளாவிய ராஜகோபுரங்கள் பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான சுதைச் சிற்பங்கள் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. கோயிலுக்குள் பொற்றாமரைக் குளம், ஆயிரங்கால் மண்டபம், நூறுகால் மண்டபம், அம்மன் மற்றும் சுவாமி பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளும் புனரமைக்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் விளங்குகின்றன.
இரவு நேரங்களில் வண்ண விளக்குகளும் லேசர் ஒளிகளும் கோபுரங்களை ஜொலிக்கச் செய்து, நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் காணக்கூடிய கண்கொள்ளாக் காட்சியை அளிக்கின்றன. உள்ளூர் பக்தர்கள் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் அலைமோதுகின்றனர். கடந்த இரு நாட்கள் விடுமுறை காரணமாக கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இதையும் படிங்க: கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!
அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், தொன்மையான கோயில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. நுழைவு வாயில்களில் தண்ணீர் மற்றும் பிஸ்கெட் அடங்கிய பிரசாதப்பைகள் வழங்கப்படும். பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோயில் வளாகம் மற்றும் சுற்று வீதிகளில் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுடன் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் விழாவை நேரடியாகக் காண வசதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆறாயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 5 முதல் 6 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெறும். 17-ஆம் தேதி காலை 7.40 முதல் 8.10 மணி வரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்கள் மற்றும் மூலவர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும். அமைச்சர்கள், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதீனப் பெருமக்கள், அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவை முன்னிட்டு 186 திருப்பணிகள் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (15-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும்..!!