×
 

திருப்பதிக்கு போறீங்களா..?? இன்று முதல் 8ம் தேதி வரை..!! சொர்க்கவாசல் தரிசனத்திற்கு முன்பதிவு டோக்கன் வேண்டாம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் இலவசமாக சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 2) முதல் வரும் 8-ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் இலவசமாக சொர்க்கவாசல் வழியே பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறிவித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைணவ சம்பிரதாயத்தில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று அனைத்து விஷ்ணு கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்த வாசல் வழியாக சென்று இறைவனை தரிசித்தால், மறுபிறவி இல்லாமல் மோட்சம் கிடைக்கும் என்பது பழங்கால நம்பிக்கை. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி திருப்பதி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: சொர்க்கவாசல் தரிசனம் பாக்கணுமா..?? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பொதுவாக இந்த வாசல் 10 நாட்களுக்கு திறந்திருக்கும். திருப்பதி கோயிலில் கடந்த டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இலவச சொர்க்கவாசல் தரிசனத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்த குலுக்கலில் 1.80 லட்சம் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைத்தன.

மேலும், இன்று முதல் 8-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 1,500 டிக்கெட்டுகள் வீதம் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்கள் டிசம்பர் 5-ஆம் தேதி விநியோகிக்கப்பட்டன. இந்த மூன்று நாட்களில் (டிச.30 முதல் ஜன.1 வரை) ரூ.300 தரிசனம் உள்ளிட்ட பிற சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ப்ரோட்டோகால் விஐபி அல்லாதவர்களுக்கான தரிசனமும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று முதல் 8-ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாத பக்தர்களுக்கு இலவசமாக சொர்க்கவாசல் வழியே ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், ரூ.300 டிக்கெட் பெற்றவர்களும் தரிசனம் செய்யலாம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

சொர்க்கவாசல் வழியாக இறைவனை தரிசிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழா வைணவ பக்தர்களுக்கு ஆன்மிக மகிழ்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சொர்க்கவாசல் தரிசனம் பாக்கணுமா..?? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share