வைகுண்ட ஏகாதசி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..!! எப்போ தெரியுமா..??
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.
சென்னையின் பழமையான மற்றும் புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயில் கருதப்படுகிறது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாகும். மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நிற்க, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.
பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது.
இதையும் படிங்க: பிறந்தாச்சு மார்கழி..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! பஜனை பாடி மக்கள் உற்சாகம்..!!
31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. மேலும் ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்நாளில் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதால், பாவங்கள் நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இவ்விழா 21 நாட்கள் நீண்டு கொண்டாடப்படும். பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களுடன் தொடங்கி, ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு உச்சகட்டத்தை அடையும்.
கோயில் நிர்வாகம் சார்பில், சொர்க்கவாசல் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் சுற்றுப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர்.
பார்த்தசாரதி சுவாமி கோயில், கிருஷ்ணரை அர்ஜுனனின் தேரோட்டியாக வழிபடும் தனித்துவமான தலம். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழாவில், நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. ஏகாதசி அன்று இரவு 11.30 மணிக்கு உற்சவர் பெரிய வீதி உலா வரும். பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என முழக்கி, திருவாய்மொழி பாசுரங்கள் பாடி கொண்டாடுவர்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்போர் அரிசி உணவை தவிர்த்து, பழங்கள், பால் உணவுகளுடன் விரதமிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்நாளில் சொர்க்கவாசல் தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்விழாவை முன்னிட்டு, சென்னைவாசிகளும், பிற ஊர்களிலிருந்து வரும் பக்தர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.
இதையும் படிங்க: கோவில் கொடி மரங்களுக்காக ‘திவ்ய விருட்சங்கள்’..!! புதிய திட்டத்தை தொடங்கிய திருப்பதி தேவஸ்தானம்..!!