விழாக்கோலம் பூண்ட மைசூரு.. கோலாகலமாக தொடங்கிய தசரா விழா..!!
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
கர்நாடகத்தின் ‘நாடஹப்பா’ என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது. கர்நாடகாவின் மாநில விழாவாக அறியப்படும் இந்தப் பண்டிகை, நவராத்திரியின் முதல் நாள் எனும் விருச்சிக லக்னத்தில் சாமுண்டி மலைகள் உச்சியில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கும்.
இந்தாண்டு தசரா விழா 11 நாட்கள் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விஜயதசமி நாளில் ஜம்பு சவரி அரங்கேறும். மழைக்காலத்தில் நல்ல மழை பெய்ததால், அனைத்து ஆறுகளும் ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதனால் விழா இன்னும் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாமுண்டீஸ்வரி தேவியின் மஹிஷாசூரர் மீதான வெற்றியை சித்தரிக்கும் இந்த விழா, நன்மை தீமையை வெல்லும் செய்தியை உலகிற்கு அனுப்புகிறது.
விழாவின் தொடக்கத்தில், சர்வதேச புக்கர் பரிசுவென்ற பானு முஷ்தாக் (Banu Mushtaq) சாமுண்டி மலையில் பாரம்பரிய விளக்கேற்றி, சாமுண்டீஸ்வரி உருவத்திற்கு மலர்மாலை அணிவித்து விழாவைப் தொடங்கி வைத்தார். "இன்றைய உலகம் வெறுப்பால் இயங்குகிறது. மைசூரு தசரா அமைதியும் ஐக்கியமும் கோரும் குரலாகும்" என்று அவர் உரையாற்றினார். மேலும் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மந்திரிகள் பரமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, சிவராஜ் தங்கடகி உள்பட பல மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி வணங்கினர்.
இந்த விழாவையொட்டி மைசூர் அரண்மனை முழுவதும் 97,000 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 7 முதல் 9 மணி வரை ஒளிரும். இன்று முதல் எட்டு நாட்கள் இந்த ஒளி அரங்கம் நடைபெறும். தசரா விழா தொடங்கிய பிறகு மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதனை மன்னர் யதுவீர் தொடங்கி வைத்தார். அதையடுத்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து தர்பார் மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துகிறார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார். மேலும் அரண்மனை வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதுதவிர தசரா விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் உணவு மேளா, மானஷ கங்கோத்ரி வளாகத்தில் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மைசூருக்கு வந்துள்ளனர். போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உள்ளன. இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.