பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியும், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குநருமான மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52-வது வயதில் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரபல கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரான இவர், வெறும் 7 மாதங்களுக்கு உள்ளாக 8,000 மீட்டர் உயரமுள்ள இரண்டு முக்கிய சிகரங்களில் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்திய பெண்மணி என்ற வரலாற்றுப் பெருமையையும் இதன் மூலம் பெற்றுள்ளார். தகுந்த திட்டமிடல், முறையான உடற்பயிற்சி மற்றும் தீவிர மலையேற்றப் பயிற்சிகள் மூலம் இந்த அரிய இலக்கை அவர் எட்டியுள்ளார்.
தன்னுடைய இந்த இமாலய சாதனை மலையேற்றம் குறித்து விளக்குவதற்காகச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை மருத்துவர் பிரியா செல்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, எவரெஸ்ட் சிகரத்தை அடைவது தனது முதன்மை இலக்காக இருந்தாலும், உண்மையான மன உறுதி, விடாமுயற்சி மற்றும் ஆன்மீக நம்பிக்கை ஆகியவற்றை முன்வைத்தே இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!
மேலும், இந்த மலையேற்றப் பயணம் மிகுந்த சவால்கள் நிறைந்தது என்று குறிப்பிட்ட அவர், தனது பயிற்சியாளரின் தொடர் வழிகாட்டுதலும், குடும்பத்தினரின் முழுமையான ஒத்துழைப்பும் இருந்ததாலேயே இந்த சாதனையைத் தம்மால் சாத்தியமாக்க முடிந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வயது மற்றும் தற்போதைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், லட்சிய இலக்குகளை நோக்கி முன்னோக்கிச் செல்ல தாம் முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எவரெஸ்ட் சிகரம் அதன் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப, ஒரு மனிதனின் மன உறுதி மற்றும் உடல் வலிமை உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாகச் சோதித்துப் பார்க்கும் தன்மை கொண்டது என்றும், இருப்பினும் அனைத்துச் சவால்களையும் கடந்து அந்த இலக்கை அடையும் போது தமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் பிரியா செல்வராஜ் தெரிவித்தார். எந்தவொரு பெரிய சாதனையைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல என்று கூறிய அவர், வலுவான மன உறுதியும், முறையான உடல் நலமும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!