பெண்களை 'அந்த மாதிரி' வீடியோ எடுத்த இளசுகள்.. சிக்கிய 2 பேர்.. மேலும் இருவருக்கு வலைவீச்சு..!
செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்களில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல்லில், வெள்ளைமாலை வீருமாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒரு நாள் இரவு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமையான நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கரூர், சென்னை, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் இரவு தங்கி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்காக குளியல் அறை அமைக்கப்பட்டது. இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் குளிக்கும் போது வீரக்கல் அருகே வண்ணம்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் ஜன்னல் வழியாக தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஒரு பெண் கத்தி கூச்சலிடவே, பொதுமக்கள் அந்த நான்கு இளைஞர்களை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!
இதனால் ஆத்திரமடைந்த திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை சுமார் 5 மணி நேரமாக செம்பட்டி 4 ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் தேனி - திண்டுக்கல் சாலை மற்றும் மதுரை - பழனி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனால், போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து களைந்து சென்றனர்.
இந்நிலையில் விழா கமிட்டி தலைவர் திண்டுக்கல் ராமராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், திருவிழாவில் வீடியோ எடுத்த 4 இளைஞர்கள் இதுபோன்று திருவிழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் கிராமங்களில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவர்களைத் தேடி வந்த நிலையில், செம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்து வண்ணப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் கல்லூரி மாணவர் நவீன் (20), அதே ஊரைச் சேர்ந்த அலெக்ஸ் மகன் பெத்தன்ராஜ் (17) ஆகியோரை கைது செய்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் இவர்களது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த ஹரி மற்றும் விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போர் பதற்றம்..! பஞ்சாபில் உஷார் நிலை.. அடுத்தடுத்து வெளியான முக்கிய அறிவிப்புகள்..!