அதிமுக நிர்வாகி மனைவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... அம்பலமான காதல் லீலைகள்...!
விவாகரத்து தராத மனைவியை தனது ஓட்டுநர் மூலமாக கொலை செய்த அதிமுக நிர்வாகி கைது
கோவையில் மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்து நாடகமாடிய அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் சரணடைந்த ஓட்டுநர் சுரேஷை காவலில் எடுத்து விசாரித்த போது கணவரின் நாடகம் அம்பலமானது.
கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கவி சரவணன் (51). அதிமுக வடக்கு மாவட்ட அம்மா பேரவை நிர்வாகியான, இவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும், பன்னிமடை பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தவர். இவரது மனைவி மகேஸ்வரி (46), கவி சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய பந்தம் இருந்ததால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்- 28 -ம் தேதி கவி சரவணனின் மனைவி மகேஸ்வரியை அவரது கார் ஓட்டுநர் சுரேஷ் (49), என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாகக் கூறி, வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!
இதையடுத்து வடவள்ளி போலீசார் தடாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் தடாகம் போலீசார் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக சுரேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் கடந்த 15 ஆண்டுகளாக கவி சரவணனுக்கு ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், கவி சரவணன் மற்றும் மகேஸ்வரி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் மகேஸ்வரிக்கு, கவி சரவணன் கூறி வீட்டு மளிகை சாமான்களை அவ்வப்போது வாங்கி கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கம் போல் சம்பவத்தன்று மளிகை சாமான்களை கொடுக்கச் சென்றதாகவும், அப்போது கவி சரவணனுக்கு போனில் அழைத்து பேசுமாறு சுரேஷ் கூறியதற்கு மகேஸ்வரி அவரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடந்ததை கவி சரவணனிடம் கூறியதாகவும், அவரது அறிவுறுத்தலின் படி வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் கவி சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரையும் அழைத்து விசாரித்துள்ளனர். ஆனால் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தொடர்ந்து கவி சரவணன் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் தான் சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க தடாகம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து சுரேஷை தடாகம் போலீசார் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் கவி சரவணன் மற்றும் மகேஸ்வரிக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மகேஸ்வரி தொடர்ந்து கவி சரவணனுக்கு விவாகரத்து கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த கவி சரவணன் மகேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.
மேலும் மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டால், வழக்கு செலவு முழுவதையும் தான் பார்த்துக் கொள்வதாகவும், தனக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவி சேம்பர் என்ற செங்கல் சூளையை சுரேஷ் பெயருக்கு எழுதிக் கொடுப்பதாக கவி சரவணன் ஆசை வார்த்தைகள் கூறி வாக்குறுதி கொடுத்ததும் தெரிய வந்தது.
சுரேஷின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து உடனடியாக தடாகம் போலீசார் அதிமுக நிர்வாகியான கவி சரவணனை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து, அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
விவாகரத்து தராத மனைவியை தனது ஓட்டுநர் மூலமாக கொலை செய்ததோடு, அதனை மறைத்து நாடகமாடிய அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING குலை நடுங்க வைக்கும் பயங்கரம்... கோவிலுக்குள் புகுந்து இருவர் வெட்டிக்கொலை ...!