கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!
உத்தர பிரதேசத்தில், காணாமல் போனதாக கூறப்பட்ட கணவரை, மனைவியே கொலை செய்துவிட்டு, உடலை வீட்டின் குளியலறையில் புதைத்து வைத்து நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபரின் உடல், அவரது வீட்டின் குளியலறை தரையின் கீழ் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், கணவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்து நாடகமாடிய மனைவியையே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ராவைச் சேர்ந்த 44 வயதான சுரேந்திர குமார் சர்மா, கடந்த மே 18-ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி ரூபி, மே 26-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். மேலும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடமும், தனது கணவர் எங்கோ சென்றிருப்பதாகவும், விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகாரின் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் சுரேந்திர குமாரை தேடியும், 45 நாட்களுக்கும் மேலாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்று ரூபியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதேவேளை, சுரேந்திராவின் சகோதரர் அனில் சர்மா வழங்கிய தகவல்களும் போலீசாருக்கு முக்கிய துப்பாக அமைந்தன.
இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்த பெண்! பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல்! இருவர் கைது!
அதனைத் தொடர்ந்து வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், குளியலறை தரையில் புதிதாக சிமெண்ட் பூசி டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்ததை கவனித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதியை தோண்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில் சுரேந்திர குமாரின் உடலை மீட்டனர். உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து ரூபியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஆரம்ப விசாரணையில், குளியலறை புதுப்பிப்பு பணியை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்கியதாகவும், கணவரை கொலை செய்த பிறகு உடலை அங்கு புதைத்து டைல்ஸ் பதித்து மறைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுரேந்திராவின் சகோதரர் அனில் சர்மா கூறுகையில், சுரேந்திரா மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், தம்பதியருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தார். இருப்பினும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன, இந்த குற்றத்தில் ரூபிக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!