×
 

டேட்டிங் செயலி 500 பெண்களை ஏமாற்றிய கயவன்! விதம் விதமாய் ரீல் சுற்றி ரூ.2 கோடி வரை மோசடி!

நாடு முழுதும் 500க்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைதளங்கள் மற்றும், 'டேட்டிங்' செயலி வாயிலாக ஏமாற்றி, 2 கோடி ரூபாய் சுருட்டிய நபரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.

இணைய உலகில் காதல் வலையில் விழுந்து பணத்தை இழந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு பெரிய மோசடி வழக்கில் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஆனந்த் குமார் என்பவரை டெல்லி போலீசின் தென் மேற்கு மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர்.

சமீபத்தில் ஒரு பெண், டெல்லி சைபர் போலீசுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், “வைபவ் அரோரா” என்ற பெயரில் ஒரு தொழிலதிபராக டேட்டிங் செயலியில் அறிமுகமான நபர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலாக தன்னுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தினார். 

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அவர், மருத்துவத் தேவை என்று கூறி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்தார். பின்னர் ‘ஆனந்த்’ என்ற உறவினரை அறிமுகப்படுத்தினார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. உறவினரைத் தொடர்பு கொண்டபோது, வைபவ் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது என்று அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினர். புகார்தாரர் கொடுத்த மொபைல் எண் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, அந்த எண் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், ஆனந்த் குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. ஆனந்த் குமார், டேட்டிங் செயலிகள், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். 

வழக்கறிஞர், டாக்டர், தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பல்வேறு வேடங்களில் அவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்தி, திருமணம் அல்லது வேலை வாய்ப்பு என்று ஆசை காட்டி பணம் பறித்துள்ளார். பணம் தர மறுத்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியும் பணம் பிடுங்கியது தெரியவந்துள்ளது.

இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை அவர் சுருட்டியதாக போலீசார் கூறுகின்றனர். அவரிடமிருந்து நான்கு ஸ்மார்ட் போன்கள், எட்டு சிம் கார்டுகள், மூன்று டெபிட் கார்டுகள், தங்க பிரேஸ்லெட்டுகள் மற்றும் சங்கிலிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணத்தை வைத்து அவர் தங்க நகைகள் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் இணையத்தில் காதல் மோசடிகளுக்கு எதிராக பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. டெல்லி போலீசார் மேலும் பல புகார்களை ஆய்வு செய்து வருகின்றனர். இத்தகைய மோசடிகளில் சிக்கும் பெண்கள் உடனடியாக உள்ளூர் சைபர் கிரைம் போலீசை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: தாய், மகளை கடத்தி ஆபாச படமெடுத்து மிரட்டல்?! நிலத்தகராறில் திமுக நிர்வாகி படுபாதகம்!! அண்ணாமலை ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share