×
 

பாஜக ஆட்சியில் மீனவர் உயிரிழப்பு இல்லை...! தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா அதிரடி பேச்சு!

திமுக ஆட்சியில் ஊழலும், கனிமவளக் கொள்ளையும் தலைவிரித்து ஆடுகிறது - தெருமுனைப் பிரச்சாரத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் குற்றச்சாட்டு.

நாளை நமதே, தமிழ்நாடு நமது என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தெருமுனைப் பிரச்சாரத் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரக் கூட்டத்தைத் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவின் ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர் ஒருவர் கூட சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி உண்டா? பாஜக சொன்னதைச் செய்யும் செயல்மிகு கட்சி. தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. திமுகவின் ஆட்சி என்பது வெறும் குடும்ப ஆட்சிதான்; அவர்கள் மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. கனிமவளக் கொள்ளை மற்றும் லஞ்ச லாவண்யம் பெருகிவிட்டது.

இதையும் படிங்க: மார்ச் தமிழகம் வரும் பிரதமர்.. மதுரை மற்றும் வேலூரில் பொதுக்கூட்டம்! முன்னேற்பாடுகள் தீவிரம்!

முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டு வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். நாட்டில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டங்களை இந்த அரசு கண்டுகொள்வதே இல்லை.

மத்தியில் ஆளும் பாஜகவின் நல்லாட்சி தமிழகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றால், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி உலக அளவில் சக்திவாய்ந்த தலைவராகத் திகழ்வதாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாஜகவின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share