பட்டப்பகலில் துணிகரம்.. மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்.. பத்திரமாக மீட்ட போலீஸ்..!!
குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி கடத்தல் சம்பவம் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்பவர் வேணு. இவர் தனது 4 வயது மகன் யோகேஷை இன்று மதியம் பள்ளியில் இருந்து மதிய உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தையும், மகனும் வீட்டிற்கு செல்ல முயன்றபோது, அங்கு காரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிறுவனின் தந்தை முகத்தில் மிளகாய் பொடியை வீசி, குழந்தையை அவரது கண் எதிரே காரில் கடத்தியுள்ளனர்.
இதனைக்கண்டு பதறிப்போன தந்தை வேணு, கத்தி கூச்சலிட்ட நிலையில், கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இதனைத்தொடர்ந்து அவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க, குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் உடனடியாக செயல்பட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தினார்.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!
தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டு நான்கு திசையிலும் காவல்துறையினர் கார் சென்ற இடங்களை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் போலி பதிவு என்பது தெரியவந்தது.
இந்நிலையில், குடியாத்தத்தில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீசார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர். போலீசாரின் இந்த தீவிர நடவடிக்கையை அறிந்து கொண்ட கடத்தல்காரர்கள், தேவிகாபுரம் பகுதியில் குழந்தையை காரில் இருந்து இறக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுவனை மீட்டு, அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை கடத்திய மர்ம நபர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இரண்டு மணி நேரத்தில் குழந்தையை மீட்டதால் விரைவாக செயல்பட்ட காவல் துறைக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பட்டப் பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய ராகுல் காந்தி.. நனவானது குட்டி சிறுவனின் ஆசை..!!