×
 
☰

ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஹரியாணா மாநிலத்தின் நுஹ், பல்வால், மேவாத் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் அனுபவம் பெற்றவர்கள் புதிய நபர்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாக தகவல் கிடைத்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில், கொள்ளையர்களின் செயல்பாடுகள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வடமாநிலங்களில் புதிய நபர்களுக்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக தூக்கிச் செல்வது, இயந்திரத்தை வெட்டி அதிலுள்ள பணத்தை எடுத்துச் செல்வது உள்ளிட்ட முறைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் சுமார் ரூ.32 லட்சம் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையும் படிங்க: காதலித்த பெண்ணை வீடியோ காலில் ஆபாசமாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து மிரட்டல்? சென்னை ஜிம் மாஸ்டர் கைது!

இதையடுத்து தமிழக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, வடமாநிலங்களைச் சேர்ந்த சிலரை கைது செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. அந்த விசாரணையின்போது, ஹரியாணா மாநிலத்தின் நுஹ், பல்வால், மேவாத் உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் அனுபவம் பெற்றவர்கள் புதிய நபர்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பழைய ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டதாகவும், சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்வது, இயந்திரத்தை வெல்டிங் செய்வது, கேஸ் கட்டிங் கருவிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்திற்கு சேதம் ஏற்படாமல் இயந்திரத்தை உடைப்பதற்கான முறைகளும் கற்றுத்தரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பயிற்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இயந்திரத்தை உடைத்து முடிக்க வேண்டும் என சோதனை நடத்தப்பட்டதாகவும், திறமையாக செயல்பட்டவர்களை தலைமையில் வைத்து நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வங்கிகள் கழிவாக அகற்றும் பழைய ஏடிஎம் இயந்திரங்களை இரும்புக் கடைகளில் இருந்து வாங்கியதுடன், சில இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றதாகவும் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கும்பல்களின் செயல்பாடுகளை விசாரிக்க தமிழக காவல்துறையினர் ஹரியாணாவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உள்ளூர் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், போலீசார் சாதாரண உடையில் சென்று தகவல்களை சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் குறித்து காவல்துறையின் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: உன் மகனை கொல்லப் போறேன்! தாய்க்கு போன் செய்த கள்ளக்காதலன்! 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share